இறை உணர்வின் தன்மைகள்
இந்த உலகியலில் ஆன்மீகத்தில் சொல்லப்படும் தெய்வங்களின் பெயர்கள் அனைத்தும் ஆன்மீக தத்துவத்தை விளக்குவதற்காகவே! ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு தத்துவம், அவையனைத்தும் நம் உடல், ஆன்மா தொடர்பு கொண்டதே!…
இந்த உலகியலில் ஆன்மீகத்தில் சொல்லப்படும் தெய்வங்களின் பெயர்கள் அனைத்தும் ஆன்மீக தத்துவத்தை விளக்குவதற்காகவே! ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு தத்துவம், அவையனைத்தும் நம் உடல், ஆன்மா தொடர்பு கொண்டதே! ஆம், எந்தெந்த இறை உணர்வின் தன்மையை தனக்குள் காண்கிறோமோ? அந்த இறை மணம் நம்முள் கமழும். பின்னர் அதன் மூலம் நாம் காணும் அனுபவம் அனைத்தும் ஞானமாகி, அது எவ்வாறு உணர்வின் செயலாக உடலை இயக்குகிறது என்பதைத்தான் மெய்ஞானிகள் உணர்ந்தார்கள். ஆதலால் விநாயகனை ஞானவான் என்று உணர்த்தினர்.
பரிணாம வளர்ச்சியில் வந்த நாம், கருணை, தயவு, பரிவு, அன்பு கொண்ட உணர்வுகள் அடைந்து, நமக்குள் நல்ல ஆற்றல்கள் கிடைக்கப்பெற்று தூய்மையான மனிதன் ஆன பின்பே, ஆறாவது அறிவானது சிறந்து விளங்கி, சிறப்புடன் செயலாற்றி தீயவற்றை நீக்கி நல்லவற்றை உருவாக்கி தருகிறது. அந்த நிலையைத்தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்று சொல்கிறார்கள் ஞானியர்கள்.
அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்வின் சக்தியானது இந்த உடலை இயக்கி, அந்த உணர்வின் சக்தியை வலுவாக நமக்குள் இயக்குகின்றது, இந்த பெரு நிலையை தான் நந்தீஸ்வரர் என்றார்கள். இப்படித்தான் கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கின்றான் என்று சொல்கிறார்கள் அல்லவா? அதாவது நாம் ஒரு செயலைக் கண்ணால் பார்க்கும் பொழுது அந்த உணர்வினை எடுத்து சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் நிலைகளே நாதங்களாக எழும்பி நம்மை இயக்கும். இதைத்தான் கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கின்றான் என்றார்கள் ஞானிகள். நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நல்லது கெட்டதை உணர்த்தி, அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலையயும், அறிந்து கொள்ளும் நிலையையும் உருவாக்கியது கண்தான் என்ற உண்மையை உணர்த்துவதற்காக கண்ணைக் கண்ணனாக உருவக படுத்தினார்கள் ஞானிகள்.
நமக்குள் உருவான சக்தியான வெப்பம், இயக்கும் சக்தியான நஞ்சு, இணைக்கும் சக்தியான காந்தம், மணம் நான்கும் ஒரு அணுவிற்குள் இயக்கச் சக்தியாக மாறும்போது ஐந்தாவது நிலையான உணர்வு என்ற இயக்க நிலை அடைகின்றது. இதுவே காயத்திரி எனப்படுகிறது. இந்த அனைத்தையும் காயத்திலிருந்து எரிப்பதே, காயத்திரி! இப்படி புரிந்து கொண்டால் மனிதன் பிரிவினை எண்ணம் இல்லாமல் ஒவ்வொரு ஆன்மாவாக பார்ப்பான். சடங்கு சம்பிரதாயம் பார்க்காமல் உயிரை நேசிப்பான்.
– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்