சித்தர்களை வணங்கி வாழுங்கள்..!

இந்த உலகியலில் இயற்கையானது கருணையாகவே மலர்ந்து இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் பஞ்ச பூதங்களின் துணையால், கருணையால் வாழுகின்றோம். பஞ்ச பூதங்களின் இணைந்த மனிதனும் இயல்பாகவே கருணை குணம்…

சித்தர்களை வணங்கி வாழுங்கள்..!

இந்த உலகியலில் இயற்கையானது கருணையாகவே மலர்ந்து இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் பஞ்ச பூதங்களின் துணையால், கருணையால் வாழுகின்றோம். பஞ்ச பூதங்களின் இணைந்த மனிதனும் இயல்பாகவே கருணை குணம் கொண்டவன் தான்! அப்படி வாழ்ந்த தமிழர்களின் இயற்கை விதியை மாற்றி,  மூட நம்பிக்கைகளான பக்தி சடங்குகள், சாதி சம்பிரதாயம் சடங்குகள் திணிக்கப்பட்டு, இயல்பான வாழ்க்கையை அழித்து விட்டார்கள், ஆதாய சக்திகள். தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் ஆன்மீகவாதியாக இருக்க மாட்டார்கள் என்பது சித்தர்கள் கருத்து. கருணையான தமிழ் கலாச்சாரம் பண்புடைய மனிதர்களை கொண்டது, அந்த மனிதர்கள் தான் இந்த பூமியில் சித்தர்களாக அவதரித்தார்கள். அவர்கள் பூசை செய்ய சொல்ல வில்லை, மந்திரம் தந்திரம் சொல்லி, யோகம் யாகம் என்று சொல்லி மக்களை ஏமாற்ற வில்லை. இயல்பாகவே பிறர் நலன் பேணும் பண்பு கொண்டு, இயற்கையை மதித்து வணங்கும் அறிவை பெற்றிருந்தார்கள். இந்த அழகிய அன்பு கருணை மிகுந்த மக்களை செல்வம் வாரியாக பிரித்து வருண பேதம் கற்பித்து, பொய்யான புராண கதைகளை புனைந்து, நமக்குள் பிரிவினை எண்ணம் ஏற்படுத்தியவனை மறந்து, எவனோ வகுத்த வரையறை இல்லாத ஒன்றை பற்றிக் கொண்டு, மதம், சாதி, சடங்குகளில் சிக்கிக் கொண்டு தவிக்காமல், இதிலிருந்து வெளி வந்து விடுங்கள். இந்த ஏற்ற தாழ்வுகளால் இன்று நீங்கள் ஒற்றுமை இல்லாமல் இறையை அடைய முடியாமல் வேறுபட்டு நிற்கிறீர்கள். செய்த தவறினை எவரும் ஒப்புக்கொண்டது கொள்ள மாட்டார்கள். நீங்கள் கொண்ட மதம் தான், நீங்கள் உயர்வெனச் சொல்லிக் கொள்ளும் சாதியில் தான்,  உங்களை அவமானப்படுத்த மக்கள் இருப்பார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். உங்கள் சாதி மக்கள் உங்கள் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு, உங்களை  ஏமாற்றி இருப்பார்கள், எல்லா இடத்திலும் பணம் என்ற சாதி தற்போது முன்னிலை வகிக்கிறது,  எல்லாம் மாயையே!

உண்மையில் உலக உயிர்களிடம் வேற்றுமை காணாதவன் மட்டுமே, ஆன்மீக பாதையில் சிறப்பாக பயணிப்பான் என்பதே நியதி, இதனை கடைபிடித்தே இங்கு ஞானியர்கள், மகான்கள் சித்தி பெற்றார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். அப்படி போராடியவர்களை எதிர்ப்பவன் இந்த நாட்டின் துரோகிகள், வளத்தை அழிக்க வந்த பாவிகள்!

ஆதலால் இயல்பாக இருக்க பழகுங்கள், உங்களால் இயன்ற நன்மைகளை இயல்பாக செய்யுங்கள், தவறு என்றால் வருந்துங்கள், அதுவே மிகப்பெரிய மீட்பு, உங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அல்லது  மன்னிப்பு கேளுங்கள்!  அதுவே முழுமையான கருமம் விலகும் மீட்பு என்பதனை உணருங்கள்.

ஆக இங்கு தாமரை இலை மீது தண்ணீர் போன்று இருந்து, பிற ஆன்மாக்கள் பலன் அடையும் படி வாழுங்கள். இங்கு பல மனிதர்கள் உங்கள் மீது இல்லாத ஒன்றை கற்பனையாக சொல்லியும், பொறாமை கொண்டு வாழ்வை பொசுக்குவதையும், அடிக்கடி நிறம் மாறி வாழும் பச்சோந்திகளாகவும் இருக்கிறார்கள்,  இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்துள்ளீர்கள். அந்த தீவினை எண்ணம் உடையோரை மன்னியுங்கள், ஆனால் அந்த அற்பர்களிடம் இருந்து  விலகி கொள்ளுங்கள். ஏனெனில் அதன் நினைவுகள் கூட நம்மை தாக்கும். எண்ணம் தான் வாழ்வு, கருணை, தயை, அன்பு இவற்றை எண்ணம், செயலில் புகுத்தி பொறுமையும் நம்பிக்கையும் கொண்டு சித்தர்களை வணங்கி வாழுங்கள். நல்ல ஜீவ சமாதிக்கு அடிக்கடி சென்று வாருங்கள், அப்போது இயல்பாகவே நல்ல காட்சிகள் கிடைக்கும், பல அபூர்வ நிகழ்வுகள் உங்களை ஆச்சர்ய படுத்தும், அதன் பின் ஏற்படும் தனிமை உங்களை வளப்படுத்தும். எல்லாம் இறை தத்துவம் என்பதனை உணர்ந்து வளமோடு வாழுங்கள், வேண்டுவன யாவும் பெறுங்கள்! 

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்