பணத்தை மட்டுமே வாழ்வாகக் கருதிவிடாதீர்கள்..!
இவ்வுலக வாழ்வு என்பது வினையின் பயன் என்பதனை உணர வேண்டும். இன்பம் என்று நினைத்து கலந்ததெல்லாம் துன்பமாக வந்திருக்கும். அந்த துன்பங்களினால், சிலர் மகிழ்ச்சியை இழந்து, ஏதோவொரு…
இவ்வுலக வாழ்வு என்பது வினையின் பயன் என்பதனை உணர வேண்டும். இன்பம் என்று நினைத்து கலந்ததெல்லாம் துன்பமாக வந்திருக்கும். அந்த துன்பங்களினால், சிலர் மகிழ்ச்சியை இழந்து, ஏதோவொரு சிந்தனையைத் தாங்கி கொண்டு பயணிக்கின்றனர். இப்படி, சொல்ல முடியாத துயரங்கள், தீர்க்க முடியாத வருத்தங்கள் என கவலைப்பட்டுக் கொண்டே வாழ்க்கை நகர்ந்து விடுகின்றது. தன்னை மறந்து புன்னகையுடன் மகிழ்வாக செல்ல இயலவில்லை என்பதனை எல்லோரிடத்திலும் காண முடிகின்றது. ஆனால் துன்பம் தான் ஞானத்தின் பிறப்பிடம். அதுவே பேரின்பத்திற்கு வழிகாட்டியாகும்.
எப்போதுமே! மனிதர்களின் மனமானது மகிழ்ச்சியை ஏற்கும் அளவிற்கு, துன்பத்தை ஏற்க மறுக்கின்றது. தன்னுடைய தேவைகளுக்காக கட்டாயமாக பொருள் ஈட்டியாக வேண்டும் என்ற மனம் இருப்பதில் தவறில்லை, சூழ்நிலைக்காக அந்த பொருளாசையை அளவிட்டுக் கொள்வதில் தவறில்லை, நிறைவேறாமல் இருக்கும் ஆசைகளை அடைவதில் தவறில்லை. ஆனால், உங்களின் ஆசையால் எவரும் பாதிக்க படாமல் பார்த்து கொள்ளுங்கள்.
பணம் வரும், போகும். ஆனால் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வாக வாழ்ந்து விடக் கூடாது. பணம் படைத்தவர்களை உயர்ந்தவர்கள், சாதித்தவர்கள் என கருதும் மடமை உலகத்தை சிலர் உருவாக்கி வைத்து விட்டார்கள். மேலும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்கும் சாதி, மதம் சடங்குகளில் நின்று உங்களை அடையாளப்படுத்தி கொண்டு கீழ்நிலை மனிதர்களாக இருக்காதீர்கள்.
உண்மையில் துன்பம் சூழ்ந்து இருந்தும், உலக நன்மைக்காக இயங்கும் ஆன்மாக்களே உயர்ந்தவர்கள், அந்த சான்றோர்களை பற்றிக் கொள்ளுங்கள். இங்கு உங்களை சார்ந்தவர்கள் யாரெனில், உங்கள் துன்பமான சூழ்நிலையில், உங்களோடு நின்றவர்களே! அத்தகையோரே உங்கள் ஆன்ம உறவுகள். நன்றும், தீதும் அறிந்துணரும் போதுதான் உங்களின் வாழ்வு அற்புதம் அடைகின்றது. இருப்பதை ஏற்போம்! இருப்பதை கொடுப்போம்! அவ்வளவு தான்! நீங்கள் ஆற்றும் ஆன்ம பணியே, உங்களின் தன்னிலை உணர்வை தூண்டிவிடும். தன்னிலை உணர்வோம், மகிழ்வோடு வாழ்வோம்! இனிய ஜீவ அமிர்த காலை வணக்கம்
– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்