பதிஎண் சித்தர்கள் என்பவர்கள் யார்?
படைப்பு எல்லாம் நம் தெளிவிற்கே! படைப்பில் மயங்கி, அதனோடு ஒன்றாமல், அந்த படைப்போடு நம்மை உணர்வதே சித்தாந்தம்! எழுதாத மறையாக, ஓதாத நூலாக உங்களை அறிவதே ஞானமான…
படைப்பு எல்லாம் நம் தெளிவிற்கே! படைப்பில் மயங்கி, அதனோடு ஒன்றாமல், அந்த படைப்போடு நம்மை உணர்வதே சித்தாந்தம்! எழுதாத மறையாக, ஓதாத நூலாக உங்களை அறிவதே ஞானமான சித்தாந்தம், இதுவே நாம் அடையும் சித்தாந்தத் தெளிவின் அடையாளம்! தன்னை தானே உணரவைக்கும் பேரின்பம்!
ஆக நம்முடனே பழகுபவர்களில், சில பேன்ட் சட்டைகள் போட்ட சித்தர்களும் உண்டு. எல்லாம் அறிந்து, கூலி வேலை செய்யும் சித்தர்களும் உண்டு! எல்லாம் உலக நன்மைக்குற்காக, சுயநலமில்லாமல், கர்வம், கோபம், ஆணவம், அகந்தை இல்லாமல் சித்தாந்த அறிவோடு வாழ்கின்றார்கள்.
எங்கும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஏதாவது ஒன்றை செய்துக்கொண்டு இருப்பர். பொருளாசை இல்லாமல், தயாபரனாய் இருக்கும் அத்தகையவரை தரிசிப்பது எளிதல்ல. அந்த அளவிற்கு நம்முடைய ஆன்மா உயர்ந்த செயல்களை செய்திருக்க வேண்டும். ஆகவே சித்தர்களின் தொண்டுகளை நாமும் பின்பற்றி அவர்களைப் பின்பற்றினால், சித்தர்களே நமக்கு நேர்வழியான மெய்வழியைத் தந்து, நம்மைக் காப்பார்கள்!
ஆகவே ஒவ்வொரு பிறவியிலும், நம்முடைய பாவ மூட்டையை தாங்கி, அண்டத்தில் இருந்து காப்பவர்கள் சித்தர்களே. அந்த வினையின் முடிச்சுக்களை அவிழச்செய்து, நமது அறிவை தெளிய வைத்து உயரிய அளவிற்கு மேன்மை படுத்துவார்கள் என்று உணர்ந்து வணங்க வேண்டும்! சித்தர்களின் பாடல்கள் யாவுமே நம் தெளிவிற்கு விருந்தாகும்!
சரி! பதிஎண் சித்தர்கள் என்பவர்கள் யார்? எப்படி இது உருவகிக்கப்பட்டுள்ளது என்பதனை காண்போம்!!! இப்போது காணும் இடமெல்லாம் நாமே வார்த்தையால் உருவாக்கி நாம் அறிந்த சில சித்தர்களை ஓர் கணக்கில் வைத்து கொண்டு வழிபடுகிறோம்!
பொதுவாகவே சித்தர்கள் என்பவர்கள் கோடான கோடி பேர் உள்ளனர்! நவகோடி சித்தர்கள் தோன்றிய நாடு நம்முடையதாகும்! பதினெட்டு சித்தர்கள் என்பது தனிப்பட்டு எண்ணிக்கையில் கிடையாது என்பதை முதலில் இங்கு உணர வேண்டும்! மேலும் “பதிஎண்” சித்தர்கள் என்பதே முழுமையான வாக்கியமும் வார்த்தையும் ஆகும்! சீவனான சிவனை, தன்(இறைவன்) பதியாகக் கொண்டு, தன் பதியையே எண்ணி, சீவனை உள்ளேக் கண்டவர்கள். எண் என்ற அகரம், உகரம், மகரத்தினை, காற்றின் கணக்கினை அறிந்து என்றும் நிலைத்து நீடுழி வாழ்வோரே சித்தர்களே ஆவர்! காலப்போக்கில் பதி எண் சித்தர்கள் என்பது மருவி, பதினெண் என்பதற்கு பதினெட்டு என்ற எண்ணாக கொண்டதால், பதினெட்டு சித்தர்கள் என பெயர் வந்துவிட்டது! எனவே பதி எண் சித்தர்கள் என்பதே சரி!
அகத்தியர் முனிவர், தன் ஞானநூலில் இந்த “பதி” என்ற வார்த்தைக்கு விளக்கம் அருளியுள்ளார்.
“உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே”
“பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்”
“பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்”
“பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்; பதியில் நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்”
“ஊதியதோர் ஊதறிந்தா லவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே யாகும் வாதிகளே இருநான்கும் பதியின் பாதம்”
“தயிலான பாதமென்றும் அடிமுடி என்றும் தாயான வத்துவென்றும் பதியின் பேரே”
“அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்”
பார்க்கும் அனைத்தையும் பதியாகவே பாவித்து கண்டுவர, மேலும் எதையுமே தன் தலைவனாக (பதியையே) சித்தரித்து எப்பொழுதும், அந்த ஒரு பதியையே எண்ணி (எண்ணத்தில்) கொண்டிருந்தால் நீங்களும் பதிஎண் சித்தர்தான்! தற்போது பதியாக உங்கள் இஷ்ட தெய்வத்தையோ அல்லது உங்களை வழி நடத்தும் பதியையோ, சித்தரையோ அந்த இடத்தில் வைத்து பழகிவரலாம்! (பதி என்ற வார்த்தைக்கு தலைவன் அல்லது இறைவன் அல்லது துணை என்று பொருள்)
– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்