உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி
இந்த உலகியலில் இது நாள் வரை ஆன்மீகம் என்று சொல்லியே ஒருவரையொருவர் அடித்து கொண்டு வாழ்வதையே காண்கிறீர்கள். மனிதர்களிடம் பிரிவினை உருவாக்கிய ஆதாய கொள்கைகளாக விளங்கும் மதங்கள்…
இந்த உலகியலில் இது நாள் வரை ஆன்மீகம் என்று சொல்லியே ஒருவரையொருவர் அடித்து கொண்டு வாழ்வதையே காண்கிறீர்கள். மனிதர்களிடம் பிரிவினை உருவாக்கிய ஆதாய கொள்கைகளாக விளங்கும் மதங்கள் பேதங்கள் பார்ப்பதால் இப்படி நிகழ்கின்றது. ஆகவே ஆன்மீக சிந்தனையுள்ளவர்கள் முதலில் கடை பிடிக்க வேண்டியது என்னவெனில் பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேச வேண்டும் என்ற பண்பை பின்பற்ற வேண்டும். அதனால் மற்றவர்கள் உங்களால் மதிக்கப்படுவார்கள், அந்த மதிப்பை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மதமாற்றம் செய்வது இழி செயலாகும்.
உண்மையான ஆன்மீகவாதி எந்த பற்றும் இல்லாதவராக இருத்தல் வேண்டும். ஆன்மீகத்திற்கு சம்மந்தம் இல்லாத கற்பிதங்களைப் புகுத்தி, மக்களை சிந்திக்க விடாமல் சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வகுத்து, மக்களின் இயலாமையை உங்களுக்கு ஆதரவாக மாற்ற நினைப்பது கண்டிக்கத்தக்கது.,பேதமின்றி மனித நலன் பேணுங்கள், வரும் தலைமுறைகளாவது காப்பாற்றப்படட்டும் ! மனித இனம் இயற்கையாக இருந்து, இயல்பாக வாழ முனையுங்கள். இயற்கைக்கு எந்த பாவ புண்ணியமும் தெரியாது. சில ஆதாய மனிதர்கள் தன்னுடைய சுயநலத்திற்கு ஏற்ப வகுத்த அநீதிகள், ஞானமான பெண்களுக்கு எதிராக வளர்த்த போலி சடங்குகளை தூக்கி எறியுங்கள்! இதெல்லாம் புண்ணியம், பாவம் என்று வகுத்த பொய்க் கதைகளை புறந்தள்ளுங்கள் !சடங்குகளை சார்ந்து வாழும் மனிதர்களின் எண்ணத்தில் பாவம், புண்ணியம் புகுந்து, அதில் மர்மமாக கருமம் பதிந்து எதிர்வினையை உருவாக்குகிறது. கொடுத்து வாழ்ந்த நம் தமிழினம், தனது தன்மையை இழக்காமல், அதாவது பண்பாட்டை காப்பாற்றினால் போதும். வாழும் காலமே சொர்கம் தான்.
உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி, பிறருக்கு நலன் புரிந்து சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம். மன அடக்கத்துடன் வாழ்பவர்கள், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவர்களாக ஆவார்கள் என்பதே சித்தர்கள் கருத்து. ஆகவே கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை, எண்ணத்தை பயணிக்க வையுங்கள். மனம் அமைதியுடன் இருப்பின் நல்ல எண்ணம் பிறக்கும், நல்ல எண்ணமே மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். அந்த நிலையில் தான் நாம் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
தனக்கென்று வாழாமல், பிறர் நலன் பேணி வாழ்பவன் இந்த பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் இன்பமுடன் வாழ்வான். பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுப்பவனே அறிஞனாகின்றான். உலகின் மூத்த குடியான தமிழர்கள் வந்த வரை வாழ வைத்தார்கள், உணவுமுறை, உறவுமுறை, கலாச்சாரம், பண்பாடு, விவசாயம், கலைகள் அனைத்திலும் சிறந்து விளங்கி சித்தர்கள் ஆனார்கள். ஆனால், நம் தமிழை மதியுங்கள், போற்றுங்கள்! தமிழ்நாட்டை, தமிழை அழிக்கவே சிலர் மனப்பால் குடித்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் அடையாளம் மட்டும் அல்ல, தமிழ் தான் உலகம் என்பதனை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்த தமிழில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும், உலகில் அதிக சித்தர்கள், மகான்கள், ஞானியர்கள் உதித்த தமிழை , பற்றினால், தன்னாலே பற்றுதல் நீங்கி இறையை அடைவது திண்ணம்.
– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்