மரண அவஸ்த்தை என்றால் என்ன?
ஐயா மரண அவஸ்த்தை என்றால் என்ன? அது மிகவும் பயங்கரமானதா? மரண அவஸ்த்தையை தவிர்க்கவே முடியாது என்று சொல்வது உண்மையா? இந்த உலகியலில் உழன்று, சிலவற்றை இன்பமாகவும்,…
ஐயா மரண அவஸ்த்தை என்றால் என்ன? அது மிகவும் பயங்கரமானதா? மரண அவஸ்த்தையை தவிர்க்கவே முடியாது என்று சொல்வது உண்மையா?
இந்த உலகியலில் உழன்று, சிலவற்றை இன்பமாகவும், துன்பமாகவும் அறியும் பொருட்டு மனதிடமே இருக்கின்றது. இறைவனால் அளிக்கப்பட்ட எல்லாவற்றையும் கருமம் எனக் கருதி அதனை ஏற்கும் பக்குவமின்றியே மனிதர்கள் மரணித்து போகின்றார்கள். 90 சதவீதம் பேர் இல்லறத்தில் உடல் வாழ்க்கையில் திருப்தி அடையவில்லை என்று கருதியே மரணத்தின் போது வேதனைப்படுகிறார்கள். சிலர் தாம் சேர்த்த செல்வத்தை நினைத்துக் கொண்டே மாய்கிறார்கள். ஆக இங்கு சுகமோ, அவஸ்தையோ மனதால்தான் ஏற்படுகின்றது. மனம் பரிபக்குவமடைந்து விட்டால் மனிதனுக்கு எந்த விதமான அவஸ்தையுமில்லை.
ஜனனம் நிகழும் பொழுது எப்படி தாய்க்கும், சேய்க்கும் சில அவஸ்தைகள் ஏற்படுகின்றதோ அது போல, மரணத்தின் பொழுது இந்த உடலுக்கும், ஜீவனுக்கும் ஏற்படும் அவஸ்தைதான் மரண அவஸ்தை எனப்படுகிறது. நாம் வசிக்கும் வீடு மிகவும் பழுதடைந்து விட்டால், அதை இடித்துத் தள்ளி விட்டு, புதிதாகக் கட்டிக் கொள்வது போன்றதுதான் இந்த ஜனனமும், மரணமும். இனி தான் வசிக்க இந்த உடல் ஏற்றதாக இல்லை என்றகிற நிலையில் அதை விட்டு மன வேதனை மற்றும் உடல் வேதனையோடு ஜீவன் வெளியேறுவதைதான் மரண அவஸ்தை என்கிறார்கள்.
வீட்டை விட்டு வெளியேறுபவன் முதலில் தனக்குத் தேவையான பொருட்களையெல்லாம் ஓரிடத்தில் குவித்து வைப்பான். பிறகு அவற்றை வேறு இடத்திற்குக் கொண்டு செல்வான். அது போல ஜீவன் இந்திரியங்கள் மற்றும் மனம், பிராணன் ஆகியவற்றை தனது இதயத்தானத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு பிறகு அவற்றோடு கூட வெளியேறும் நிலைதான் மரண அவஸ்தை. அதாவது எல்லாவற்றையும் இருதயத்தில் ஒன்று சேர்க்கும் துன்ப நிலை மரண அவஸ்தை என்றும், அவற்றோடு கூட இந்த உடலை விட்டு வெளியேறும் பொழுது ஏற்படும் வேதனையை உத்க்ராந்தி அவஸ்தை என்றும் சொல்கிறார்கள்.
மரணம் நேரிடுவதற்கு முன் ஜீவன் ஒவ்வொரு புலன்களாக வரிசையாக தன் இதயத்தில் கொண்டு போய் சேர்க்கிறது. அந்தந்த புலன்கள் இதயத்தில் ஒடுங்கிய பின் அந்தந்த அவயங்கள் செயலிழந்து போகும். முதலில் கை கால்களை அசைக்க முடியாது, அடுத்து முகர முடியாது, அடுத்து பேசவும் முடியாது. இறுதியாகக் காது செயலிழக்கும். கையை எடுத்து பிறர் கையை ஆதரவாகப் பற்ற வேண்டும் என்று நினைப்பர், அது முடியாது. இந்த அவஸ்தை வேண்டாம், எழுந்து ஓடி விடுவோம் என்று நினைப்பர், அப்போது கால்கள் அசையாது. தன் நிலையை விளக்கிச் சொல்லாம் என்று நினைத்தால், அப்போது பேசவும் முடியாது. நாக்கு பிரளாது.
பார்வையும் மங்கலாகிப் போகும். உருவங்கள் தெளிவிழந்து தெரியும். பிறகு பார்வை முழுவதுமாக அற்றுப் போகும். காது மட்டும்தான் கொஞ்சம் கேட்கும். அதுவும் எங்கோ கிணற்றுக்குள், தொலை தூரத்திலிருந்து பேசுவது போலக் கேட்கும். இவ்வாறு கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் வரிசைக் கிரமமாக இதயத்தில் சென்று ஒடுங்கி விடும். இனி என்ன செய்வது என்ற கவலையும், பயமும் வந்து விடும். ஜீவன் முடிவு செய்து விட்டது. ஆனால் மனம்… அது தன் பந்தங்களால் தவிக்கும். இனி எல்லாப் புலன்களும் அடங்கி விட்ட நிலையில் மயக்கம் வந்து விடும். அப்பொழுது மனமும் பிராணனில் அடங்கி விடும். மூச்சு மட்டுமே இருக்கும்.
பிராணனின் சஞ்சாரம் மட்டுமே இருக்கும். தொப்புள் (சமானன்), குதம் (அபானன்), இதயம் (பிராணன்), கழுத்து(உதானன்) மற்றும் வியானன் ஆகிய பஞ்ச பிராணன்கள் மட்டும் உடல் முழுவதும் சஞ்சரித்துத்துக் கொண்டிருக்கும். ஆனால் அதுவும் சற்று நேரம்தான்! இந்த ஐந்து பிராணன்களும் ஒவ்வொன்றாக வந்து ஒன்று கூடி இதயப் பகுதியில் வந்து ஒடுங்கும். இந்த ஐந்து பிராணன்களையும் ஒன்று சேர்த்து இணைத்து, ஆகர்சித்து இதயப் பகுதிக்குக் கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் வேதனை கொடூரமானது. இப்படி இந்திரியங்கள், மனம், பஞ்ச பிராணன்கள் யாவையும் ஒன்று சேர்க்கும் பொழுது ஏற்படும் வேதனை மரண அவஸ்தையாகும். ஆனால், அதோடு முடிவதில்லை. இவற்றையெல்லாம் திரட்டிக் கொண்டு ஜீவன் உடலை விட்டு வெளியேறும் பொழுது ஏற்படும் வேதனை உத்க்ராந்தி அவஸ்தை.
ஜீவன்கள் இத்தகைய மரண அவஸ்தையை, உத்க்ராந்தி அவஸ்தையை அடையாமல் மரணிக்க வேண்டும் என்பதற்காக போகர் சித்தர் கடுமையாகப் போராடியிருக்கிறார். ஆனால், மற்ற சித்தர்கள் அவரைத் தடுத்து விட்டனர். முருகப் பெருமான் கூட சிவபெருமானிடம் இதற்காகக் கடும் வாக்கு வாதம் புரிந்ததாகச் சொல்வார்கள். எனவே முருகனிடம் ஆழ்ந்த பக்தி செலுத்துபவர்களுக்கு இந்த அவஸ்தைகள் நேரிடாது என்ற கருத்து தமிழர்களான நம்முடைய மூதாதையர் வழக்கத்தில் உண்டு. ஆதலால் எதற்கெடுத்தாலும் முருகா என்று அழைப்பார்கள்! பின்னால் தோன்றிய மதங்கள் என்ன என்னவோ சொல்லி அழைத்து, மதங்களில் சாதிகளில் சிக்கிக்கொண்டு முற்றுப்பெறாத பக்தியை கொண்டு மரண அவஸ்தை அனுபவித்து வருகின்றார்கள்.
ஆழ்ந்த பக்தி என்பது திரிகரணத் தூய்மையோடு இறைவனிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைத்து விடுவதேயாகும்.
அத்தகையவர்களுக்கு இந்திரியங்கள் மனதிலும், மனம் பிராணனிலும், பிராணன் ஜீவனிலும் ஏற்கனவே ஒடுங்கி நிற்கின்றது. வாழும் போதே எந்த நிகழ்விலும் பற்றற்று இறைத்தொண்டுகளான மனிதத்துவத்துக்குரிய தொண்டுகள் செய்து, அதற்கும் தாம் பொறுப்பில்லை என்று வாழும் அன்பர்களுக்கு மரண அவஸ்தை இல்லை.
இவ்வாறு அவர்கள் தன்னிலை மறந்த, உணர்வு கடந்த பக்தி நிலையில் திகழ்வதால் உத்க்ராந்தி அவஸ்தை என்ற மரண அவஸ்தையின் உணர்விலிருந்து விலகுகிறார்கள். யோகிகளுக்கும் இது பொருந்தும். எனவே இடை விடாத ஞானதானங்கள், தேவைக்குரிய இடத்தில் இயலாதோருக்கு உதவுதல் போன்ற நற்செயல்கள் செய்வதன் மூலம் புலன்கள் தன்னாலே அடங்கும், எதிர்ப்பார்ப்பற்ற அன்பு மேலோங்கி நிற்கும்.
தன்னாலே தியானம் ஏற்பட்டு மனதை, பிராணனை வசப்படுத்தப் பழகிக் கொள்ளும். மரணத் தருவாயில் ஏற்படும் போது இந்த அவஸ்தைகளை தவிர்க்கலாம். மரணம் கூட சுகமான ஒரு அனுபவமாக ஆகி விடும். மேலும் சித்தாந்தத்தில் பயணப்பட்டு மேன்மை அடைபவருக்கு தியானத்திற்கும் மேலான சமாதியும் சாத்தியமாகும்.