தன்னை அறியும் அற்புதத்தை உணருங்கள்
இவ்வுலகயலில் யாவரும் மகிழ்ச்சியை இழந்து, ஏதோவொரு சிந்தனையை தாங்கி கொண்டு வாழ்வின் நிலை, நிலையாமையை உணராமல் வாழ்ந்து வருகின்றனர். தன் மனத்தால், சொல்ல இயலாத துயரங்கள், தீர்க்க…
இவ்வுலகயலில் யாவரும் மகிழ்ச்சியை இழந்து, ஏதோவொரு சிந்தனையை தாங்கி கொண்டு வாழ்வின் நிலை, நிலையாமையை உணராமல் வாழ்ந்து வருகின்றனர். தன் மனத்தால், சொல்ல இயலாத துயரங்கள், தீர்க்க முடியாத வருத்தங்கள் என கவலைப்பட்டுக் கொண்டே வாழ்க்கை நகர்ந்து விடுகின்றது. தன்னை அறியும் அறிவைப் பெறாமல், தன்னிறைவை கண் கொண்டு பாராமல் வாழ்வது வாழ்க்கையல்ல.
தன்னை அறிவதற்காக வாழும் வாழ்க்கை தான், உண்மையான இலக்கு. அக மகிழ்வை உண்டாக்கும் அறத்தினை செய்து, வளமுடைய வாழ்வை வாழ்வதுதான் சித்தாந்த வாழ்க்கை. அவ்வாறு செல்ல இயலவில்லை என்று கருதாமல், உங்கள் செயல்களை செய்வதோடு அறவாழ்வை வாழ்ந்தாலே போதும். இங்கு எல்லோர் முகத்திலும் இனிமையை காண முடிகின்றதா? கள்ளம் கபடமற்ற குழந்தைகள் போன்று புன்னகை சிந்த முடிகின்றதா? இல்லவே இல்லை. இறுக்கம் நிறைந்த தோற்றத்தோடு எதையோ தொலைத்தவர் போன்றே இருக்கின்றோம்.
ஏனெனில், உங்களின் தேவைகளுக்கான சிந்தனைக்கு மட்டுமே, உங்களின் வாழ்வு இயங்குகின்றது. அதுவே இயல்பற்ற வாழ்வாக இருக்கின்றது. இங்கு உங்களை சார்ந்தோரின் ஆசைகளுக்காக மட்டுமே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றீர்கள், தவறல்ல! ஆனால், உங்களின் சீவனுக்கு உகந்ததாக வாழ்க்கை இல்லை. நிச்சயமாக நித்ய கடனைச் செய்ய பொருள் ஈட்டியாக வேண்டும், தருமம் செய்ய பொருள் சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், உங்களின் எண்ணம், ஆசை அளவோடு இருந்தால், அனைத்தும் நிகழும். நிறைவேறாமல் இருக்கும் ஆசைகளை அடைய முயலுங்கள். ஆனால், அந்த ஆசையால் எவரும் பாதிக்கபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பணம் வரும், போகும். ஆனால் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வாக வாழ்ந்து விடக் கூடாது. பணம் படைத்தவர்களை உயர்ந்தவர்கள், சாதித்தவர்கள் என கருதும் மடமை உலகத்தினர், இயல்பினை இழந்த வாழ்வை சொல்லி மாளாது. இங்கு உங்களை நீங்களே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்காதீர்கள். உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்வது, கீழ்நிலை..
இந்த அண்டம் அடையாளப்படுத்தும் மனிதராக மாறுங்கள். உண்மையில், உங்களை எத்தனை துன்பம் சூழ்ந்து இருந்தாலும், நீங்கள் அதனை தவிர்க்காமல் சந்தியுங்கள். அந்த துன்பமும் பறந்தோடும். உங்களின் சிந்தனை பிறர் நலனை நோக்கி, மேல்நிலையை காணும் போது உங்களின் ஆன்ம வாழ்க்கை வெற்றியாகும். உலக நன்மைக்காக இயங்கும் ஆன்மாக்களே இங்கு உயர்ந்தவர்கள். அவ்வாறான சான்றோர்களுடன் நல்லிணக்கம் கொள்ளுங்கள். மேலும் உங்களின் ஆன்ம தேடுதல், உங்களையே உங்களுக்கு உணர்த்தும். அவ்வாறான தன்னை அறியும் அற்புதத்தை உணர்ந்து வாழ வேண்டும். அவ்வளவு தான்! நீங்கள் ஆற்றும் ஆன்ம பணியே, உங்களின் தன்னிலை உணர்வை தூண்டிவிடும். தன்னிலை உணர்வோம், மகிழ்வோடு வாழ்வோம்!
– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்