எங்கும் அடிமையாகாதீர்கள்..!
இந்த உலகியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உடையவர்கள். எல்லோரும் தமது வாழ்க்கையில் ஏதாவது ஓர் குறிக்கோளை நிர்ணயம் செய்து, அதனை அடைவதற்காக பயணிக்கிறார்கள், அதில் சிலர் சாதிக்கிறார்கள்,…
இந்த உலகியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உடையவர்கள். எல்லோரும் தமது வாழ்க்கையில் ஏதாவது ஓர் குறிக்கோளை நிர்ணயம் செய்து, அதனை அடைவதற்காக பயணிக்கிறார்கள், அதில் சிலர் சாதிக்கிறார்கள், சிலர் சாதிக்க முற்படுகிறார்கள். ஆனால், அந்த சாதனைகள் அவரவரின் முழுமையான நம்பிக்கையை சார்ந்தே இருக்கிறது. அதுவே மனித வாழ்வின் வெற்றியாகவும் கருதிக் கொள்கிறார்கள், உலகமும் அப்படித்தான் பார்க்கின்றது. அந்த வெற்றிக்காக சிலர் பலவற்றை இழக்கிறார்கள், சிலவற்றை துறக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், எத்தனை சாதனை செய்தாலும் சிலர் திருப்தி அடைவதில்லை, அப்படியெனில் அவர்கள் செய்தது எதுவும் சாதனையல்ல என்பதே பொருள்.
அதாவது மாய உலகின் சாதனைகள் அனைத்தும், நீண்டு கொண்டே செல்லும், மனம் எப்போதும் போதுமென்று எண்ணுவதில்லை. ஆதலால், இங்கு எந்த சாதனையும் சாதனையல்ல, ஆன்ம சாதனையே உலக வாழ்வில் அடையக் கூடிய பெரும் சாதனை. அந்த சாதனையை அடைவதற்கு அன்பு மட்டுமே பிரதானம்.
எங்கும், எல்லாவற்றிலும் எதிர்நோக்காமல், கிடைக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டே இருங்கள். மனதினை உறுதியாய் வைத்துக் கொள்ளுங்கள். ஆக, நீங்கள் எத்தனை பெரிய சாதனைகள் செய்தாலும் அன்பு மயமாக இருக்க பழகுங்கள், புரிதல் இல்லாதவர்கள் புரியும் வரை. ஏனெனில் அன்பும் கருணையும் மட்டுமே புனிதமானது, தெய்வீகமானது. ஏனெனில் இறைவனும் எல்லோரிடமும் அன்பு மயமாகவே இருக்கிறார்.
ஆனால், எங்கும் நீங்கள் கோழையாகி அடிமையாக இருந்து விடாதீர்கள். ஏனெனில் கோழைகள் எல்லா அடிமைகளைப் பயன்படுத்தி எல்லோருடன் சேர்ந்து எளிதாக வென்று விட்டதாக நினைப்பார்கள். அவர்களை தனியாக ஆராய்ந்தால் எல்லாவற்றிலும் தோற்றே போவார்கள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும். உங்கள் மீது எவரெல்லாம் நம்பிக்கை வைத்து பயணிக்கின்றார்களோ, அவர்கள் கூறும் ஆலோசனைகளை புறக்கணிக்காமல் செயல்படுங்கள். ஏனெனில் எதை நீங்கள் உறுதியாக கருதுகிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள். நேர்மையும், பிறர் நலன் பேணும் அன்பும், நல்ல எண்ணமும் நிலைத்து இருக்கும் போது இறைவனின் அருள் நிச்சயம் உண்டு.
– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்