பழனி மலை யானை பாதையில் அமைத்த ‘ஸ்ரீலஸ்ரீ பழனி நாச்சிமுத்து சாமிகள்’

பழனியம்பதியில் ஞானிகளுக்கும், மகான்களுக்கும், சித்தர்களுக்கும் ஏது பஞ்சம். எல்லாம் அறிந்த ஞானத்தின் தலைவன் முருகன், தன்னுடைய சித்த மரபை உருவாக்கிக் கொண்டே செல்கிறான். ஒவ்வோர் சித்த புருஷர்களை…

பழனி மலை யானை பாதையில் அமைத்த ‘ஸ்ரீலஸ்ரீ பழனி நாச்சிமுத்து சாமிகள்’

பழனியம்பதியில் ஞானிகளுக்கும், மகான்களுக்கும், சித்தர்களுக்கும் ஏது பஞ்சம். எல்லாம் அறிந்த ஞானத்தின் தலைவன் முருகன், தன்னுடைய சித்த மரபை உருவாக்கிக் கொண்டே செல்கிறான். ஒவ்வோர் சித்த புருஷர்களை முருகப் பெருமான் தன் அனுகிரகத்தால் உருவாக்கிக் கொண்டே இருப்பது இந்த காலத்திலும் சிறப்பு. அப்படி உருவாக்கப்பட்டவரே  ஸ்ரீலஸ்ரீ பழனி நாச்சிமுத்து சாமிகள் (எ) சிவநாராயண தேசிக சாமிகள் ஆவார்.?ஆம்! மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் அவதரித்தவர் நாச்சிமுத்து. ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர்களில் சிலர் மகான்களாக உருவாகியுள்ளார்கள் என்பது வரலாறு.  அக்காலத்தில் ஜமீன்கள் எப்படி உருவாகியது? என்பது பலரும் அறிவோம். நாயக்கர் ஆட்சி காலத்தில் நம்முடைய குடிமக்களின் வாழ்வாதார உடைமைகளைப் பறித்துக்கொண்டே அவர்கள் உருவாக்கப்பட்டார்கள்.

ஆம்!! அப்போதைய மன்னர் ஆட்சியில் மக்கள் சுக போகங்களுடன் வாழ்ந்தனர். ஆனால் இங்கு வந்தேறிகளாக பிழைக்க வழியற்று வந்தவர்கள் சாதி மதத்தை உருவாக்கி, மத குருமார்களாக மாறி, மன்னர்களுக்கு ஆசைகளை உண்டு செய்து அடிமைகளாக வைத்து இருந்தனர். ஏழைகளே இல்லாமல் ஞானம் மிகுந்த நாட்டில், சாதி மதம் என பேதம் வளர்த்து, மக்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்தனர்.

பின்னர் நிலத்திற்கு வரி விதித்து, மக்களின் உழைப்பை சுரண்டினர். விளைச்சலை அபகரித்து, குடி மக்களிடம் இருந்த நிலங்களை அபகரித்து அடிமைப்படுத்தினர். சூழ்ச்சியால் செல்வ செழிப்பில் வாழ்ந்து,  பல கொடுமைகளை செய்வதற்கு ஜமீன்களை உருவாக்கினர். இன்றும் பல ஜமீன்கள் அழிந்து போனதற்கு அந்த செயல்களே காரணம். சில ஜமீன் குடும்பத்தில் துறவிகளை, ஞானிகளை படைப்பது, பிரபஞ்சத்தின் இன்னொரு பணியாகவும் இருந்தது. இதுதான் மறுசுழற்சி நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு. இதனை உணர்ந்து எல்லோரும் செல்வத்தின் பயன் ஈதல் என்று தெளிவாக இருந்தால், பிறர் உடைமைகளுக்கு ஆசைப்படாமல் இருந்தால் அந்த வம்சம் வாழும் என்பது தெளிவு. 

ஆக அப்படி அபகரித்த அந்த உடைமைகளை மக்களுக்கே திரும்ப செலுத்தவேண்டும் என்பதற்காக, முருகப் பெருமான் இப்படி ஓர் திருவிளையாடலை நடத்துகிறான் என்பதுதான் உண்மை. அதே போன்று ஜமீன் வாரிசுகளில் பல மகான்கள் உருவாகியுள்ளனர், அப்படி அப்பா பைத்தியம் சாமீகள் கூட ஜமீன் குடும்பத்தில் வந்தவர்தான், அதுபோல் கோடி சாமீகளும் ஜமீன் இடத்தில் வந்து தங்கியவர்தான். இப்படி பல மகான்களை சொல்லலாம். ஆனால் இப்போது அறியாமை மனிதர்கள் சமாதிகளில் இருந்துக்கொண்டு, சாதி மத பேதங்கள் பார்ப்பதைக் காண முடிகின்றது. மடத்தினை உரிமை கொண்டாடுவதும் நடக்கிறது. இதற்காகத்தான் கொரோனா போன்ற தாக்குதலை இந்த பிரபஞ்சம் நடத்துகிறது.

மக்களுக்காக, மக்கள் நலனுக்காக தொண்டுகள் செய்பவர்களே சித்த புருஷர்கள் என்பதனை இவர்கள் உணர வேண்டும். பரிகார பஜனைகள், ஹோமம் என்று சொல்லி கோவிலை சுற்றச்சொல்லி ஏமாற்றும் திருடர்கள் அல்ல, நம் சித்தர்கள். கோவில்கள் பெயரில் மதங்கள், அதனால் பூசைகள், அதனால் பேத பாகுபாடுகள், அதனால் சாதியின் பெயரில் தர்ம சாலைகள். சாதியின் பெயரில் மடங்களை கட்டும் முட்டாள்கள் அக்காலத்தில் அதிகமாக இருந்தனர். இப்போதாவது மக்கள் திருந்த வேண்டும், சித்தாந்தம் உணர்ந்து சித்தர்களை வணங்க வேண்டும், அப்படி மனிதர்கள் பேதமற்றவர்களாக இருந்தால் எல்லா வளமும், நலமும் கண்டு, சிற்றின்பம் கடந்து பேரின்ப வாழ்வை அடையலாம். 

ஏனெனில் சாதி மத பேதமற்றவர் களையே ஞானிகளாக, மகான்களாக மாற்றுகிறார்கள்  சித்தர்கள், அதுவே சித்தாந்தம். அப்படி நாச்சிமுத்து சாமிகள் இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியில் வந்தவர், சாதி சமயம் சார்ந்தவர்களை அருகில் சேர்க்கவில்லை. மக்களிடம் எந்தவித பேதமின்றி அருட்தொண்டுகள் செய்தார். அதனால் சாமிகளின் புகழ் பதினெட்டாம் நூற்றாண்டில் பரவி இருந்தது.

அப்போது பல ஞானியர்கள் பழனியம்பதியில் இருந்தனர். அந்த ஞானியர்கள் மத்தியில், பழனிமலை அடிவாரத்தில் தவமிருந்தார் சாமிகள். அங்கு ஓர் பெரிய மடத்தை உருவாக்கினார். கையில் இருந்த செல்வங்களைக் கொண்டு பழனி மலையில் யானைப்பாதையை உருவாக்கினார் என்பது வரலாறு.

சாமிகளின் அருள்முகத்தைக் காண்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடி வந்தார்கள். தவசீலர்கள், ஞானியர்கள் சாமிகளை தேடிவந்து உபதேசம் பெற்றுக் கொண்டார்கள். முருக பக்தர்கள் எப்போதும் கருணை மிக்கவர் களாக இருப்பார்கள். தமிழ் கடவுளராக விளங்கும் முருகப்பெருமான் தன் பக்தர்களை காப்பாற்றி வழிநடத்துவது பல மகான்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது. எண்ணிலடங்காத சித்தர்களை உருவாக்கும் முருகனின் அருளாலே, பல ஞானிகள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் நாச்சிமுத்து சாமிகளிடம் ஒரு விலையுயர்ந்த கோமேதகம் கல் இருந்தது. அந்த கல்லை வைத்து பழனி முருகனுக்கு “தங்க மயில் வாகனம்” செய்ய எண்ணினார். அதில் இந்த கோமேதகம் கல்லைப் பதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அதற்கு மற்றொரு கோமேதக கல்லும் தேவைப்பட்டது, அது அபூர்வமான கல், கிடைப்பது அரிது. ஆனால் அப்படி இருந்தாலே மயில் வாகனம் அழகாக இருக்கும் என்று நினைத்து, தவத்தில் பழனி முருகனை உருகி வேண்டினார் சாமிகள்.

சாமிகளின் தவப்பயனாக, அங்கிருந்த ஒரு செல்வந்தரான ஜமீன்தார் ஒருவர் வீட்டில் அந்த கோமேதகம் கல் இருப்பதாக முருகனின் அருளால் உணர்ந்தார். பின்னர் சாமிகள் அந்த ஜமீன்தாரை சந்தித்து, உங்களிடம் ஒரு கோமேதகம் கல் இருக்கிறது. அந்த கல் ஒரு நல்ல காரியத்திற்காக தேவைப்படுகிறது என்றார். என்னிடம் நீங்கள் சொல்கின்ற, அப்படியான கல் ஏதும் இல்லையே சாமீ என்றார் ஜமீன். இருப்பினும் ஒருமுறை தேடிப்பார்த்து வருகிறேன் இருங்கள் என்று சொல்லிச் சென்றார். சாமீகள் சொன்னவாறே, நகைப் பெட்டியில் அப்படியோர் கல் இருந்தது. அதனின் அழகையும், செல்வ மதிப்பையும் அறிந்த ஜமீன்தார், மனதில் அதன் மீது கொள்ளை ஆசைக் கொண்டார், கொடுப்பதற்கு மனம் தடுமாறினார்.

சாமீகள் ஜமீன்தாரின் எண்ண ஓட்டத்தினை உணர்ந்து, “நான்  ஒரு கோமேதகம் கல் வைத்துள்ளேன், மற்றொன்று முருகனின் தங்க மயில் வாகனத்தில் அமைப்பதற்காக கேட்டேன். நானோ துறவி, இந்த ஒரு கல்லை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகின்றேன். இந்த கல்லையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று ஜமீனிடம் கொடுத்தார்”. உடனே ஜமீன் மனத்தெளிவு அடைந்தார். சாமீ என்னை மன்னியுங்கள், என்னிடம் இருந்த கல்லை தந்து விடுகிறேன். நீங்கள் முருகனுக்கு செய்யும் அருட்தொண்டில் இதுவும் சேரட்டும் என்று பணிந்து தந்தார். பின்னர் அதனை பெற்றுக்கொண்ட சாமீகள், முருகனுக்கு அழகிய தங்க மயில் வாகனம் செய்வித்து, திருக்கோயிலுக்கு அர்ப்பணித்தார்கள்.

ஞானத்தால் உயர்ந்திருந்த சாமீகள், தன்னை அண்டி வந்தவர்களின் கொடும் பிணிகளை நீக்கி அருள் செய்தார்கள். நல்ல மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள், இந்த மண்ணில் தீய மனிதர்களோடு நெருங்கி வாழ இயலாது அல்லவா?. பல போலியானவர்கள் காவி உடையில் திரிவதையும், பேராசைக்கான மக்கள் ஏமாறுவதையும் பார்த்துக் கண்டித்தார். இருப்பினும் அதிகமான போலிகள் வருவதைக்கண்டு தன் இருப்பிடத்தை மாற்ற முருகனை பணிந்தார். முருகன் அருளால் ஓர் இடத்தை உணர்ந்தார்.

தம்முடைய ஆன்மா இறையை அடையும் நேரத்தை உணர்ந்த சாமிகள், இந்த ஸ்தூலமான உடல்  ஜீவமுக்தி அடைவதை அறியும் இடத்தையும் உணர்ந்து “”ராமாயண சாவடி” என்ற இடத்தில் என் ஆன்மா இறையோடு இரண்டற கலந்து விடும் என்று சில அன்பர்களை அழைத்து சொன்னார். நான் நிட்டையில் இருக்கும்போது, இறையோடு கலந்து விடுவேன் என்றும் சொன்னார். இந்த ஸ்தூல மேனியை மதுரை புட்டு சொக்கநாதர் ஆலயம் எதிரில் உள்ள இடத்தில் ஜீவ அடக்கம் செய்ய சொல்லி, குகை செய்விக்கச் சொன்னார். அதன்படியே 1909 ஆம் ஆண்டு  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமன்று சாமிகள் சமாதி அடைந்தார்கள். சாமீகள் சொன்னவாறே சமாதி செய்விக்கப்பட்டது.

சாதி மதம் சித்தர்களின் இடத்தில் வந்து விட்டால்,

எல்லாம் பறி போகும் என்பதற்கு உதாரணம்

பழனியில் சாமிகள் கட்டிய மடத்தின் வளாகத்தில் வீடுகள் உள்ளிட்ட 19 கடைகள் உள்ளன. மடத்தை 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாச்சிமுத்து சுவாமிகள் என்ற சிவநாராயண தேசிகர் நிர்வாகம் செய்து வந்துள்ளார். அவரது சமாதிக்கு பிறகு, இந்த மடம் யாதவ மக்கள் வந்து தங்கி செல்லும் இடமாகவும், மடத்தில் பல்வேறு சுவாமி சன்னதிகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றும் வந்துள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இரு தரப்பினர் மோதலையடுத்து, சுமார் ரூ.20 கோடி மதிப்பி லான சாமிகள் மடமானது, பழனி யாதவர் மடமாக மாறியது.

சாதி வந்ததால், மதம் என்ற இந்து சமய அற நிலையத்துறை இப்போது கையகப் படுத்தியுள்ளது.

பழனி அடிவாரத்தில் சரவணப்பொய்கை அருகே வையாபுரி குளத்தின் கரையில் இந்த மடம் உள்ளது. சுமார் 1.21 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.20 கோடியாகும். இந்த மடத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழாவின் போது சுவாமி புறப்பாடு நடத்தப்பட்டு பல்வேறு கட்டளை பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளது.

மடம் சிதிலமடைந்ததால் திருவிழாவின் போது சுவாமி கட்டளை பூஜைகள் மடத்தின் வெளியிலேயே நடைபெற்று வந்தது. மடம் யாதவ இனத்துக்கு சொந்தமானது, இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்று ஒரு தரப்பினரும் மடத்தின் உரிமை தங்களுக்கானது, தாங்கள் நாச்சிமுத்து சுவாமிகளின் வாரிசுகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (மதுரை மண்டலம்) நடராஜன் முன்னிலையில் தனியாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில், மடத்தின் சொத்துக்களை முறைகேடாக விற்பதை தடுக்கவும், மடத்தை புனரமைக்கவும், சுவாமி சன்னதிக்கு கும்பாபிஷேகம் செய்யவும் இடைக்காலமாக திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலரை தக்காராக நியமித்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், முறைகேடாக விற்கப்பட்ட சொத்து விபரம், மடத்தை பராமரிக்க செய்ய வேண்டிய பணிகள், கடைகளின் வாடகை வரவு-செலவு கணக்கு குறித்தும் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் உதவி ஆணையர் அனிதா, ஆய்வாளார் உமா, தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் நாராயணீ உள்ளிட்டோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மடத்தின் பொறுப்புக்களை கையகப்படுத்தினர். இதற்கான நோட்டீஸ் கடைகள், மடம் மற்றும் வீடுகளின் சுவற்றில் ஒட்டப்பட்டது.