நானும் நீங்களும்
ஒரு ஊரில் பெரிய சூதாடி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அவனைத் திருத்த முயன்றனர். சூதாடி யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்…
ஒரு ஊரில் பெரிய சூதாடி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அவனைத் திருத்த முயன்றனர். சூதாடி யாருடைய பேச்சையும் காதில் போட்டுக் கொள்ள வில்லை. விரைவில் சகல சொத்துக்களையும் இழந்துவிட்டான். கடைசியாக ஒரு ரூபாய் மட்டும் அவனிடம் மிச்சம் இருந்தது.
அவன் மனைவி, “இப்போதாவது புத்தியுடன் நடந்து கொள்’ என்றாள்.
அதைக்கேட்ட சூதாடி, “எல்லாம் போய்விட்டது. இந்த ஒரு ரூபாய்தான் மிச்சமிருக்கிறது. எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்புக் கொடு. யார் கண்டது? இந்த ஒரு ரூபாய் எனது சூழ்நிலையையே மாற்றியமைத்து விடவும் செய்யலாம்?’ என்றான்.
சூதாடிகள் எப்போதும் இப்படித்தான் பேசுவார்கள்.
“பல லட்சங்களை இழந்தாகிவிட்டது. இந்த ஒரு ரூபாய்க்காசு ஏன் கவலைப்படுகிறாய்? இதையும் சூதாட அனுமதி கொடு’ என்று மனைவியிடம் கேட்டான்.
“எல்லாம் போய் விட்டது. அவர் கடைசி ஆசையை ஏன் தடை செய்ய வேண்டும்’ என்று நினைத்தாள் அவன் மனைவி.
சூதாடி காஸினோவுக்குச் சென்றார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவனுக்கு வெற்றி கிடைத்தது. ஒரு ரூபாய் ஓராயிரமாக மாறியது. ஓராயிரம் பல லட்சமாயிற்று இதுதான் கடைசிமுறை!
இனி சூதாட மாட்டேன் என்று அந்த லட்ச ரூபாயையும் வைத்து சூதாடினான். எல்லாம் போய் விட்டது. வெறும் கையுடன் வீடு திரும்பினான்.
மனைவி அவனை பார்த்து, “என்ன ஆயிற்று’ என்று கேட்டாள்.
“நான் எனது ஒரு ரூபாயை இழந்துவிட்டேன்’ என்றான் சூதாடி. லட்சம் ரூபாய் பறிபோனதைச் சொல்லவில்லை. மரணத்தின்போது நீங்கள் கொண்டுவந்த உயிரை இழப்பதை உணர்வீர்கள் . அந்த ஒன்று பறிபோகும் போது உங்களிடமிருந்து அல்லது நீங்கள் சம்பாதித்த அனைத்தும் கைநழுவிப் போகின்றன.
பல லட்சங்கள் சம்பாதித்து வைத்திருந்தாலும் நீங்கள் இறக்கும்போது அதை இங்கேயே விட்டு விட்டுப்போக வேண்டியிருக்கிறது. “நீங்கள்’ என்ற ஒன்றுதான் உங்களுடன் செல்லும். உங்களுக்குள் ஒன்றியிருக்கத் தெரிந்து கொண்டால் நீங்கள் வெற்றியாளரா வீர்கள். அந்த ஒன்றைத் தெரிந்து கொண்டால் அதில் வசித்திட இயலும். அதையே சிவன் தனது சிவசூத்திரத்தில் “தன்னுடன் ஒன்றிக் கலந்து விடுவதே சக்தியாகும்’ என்கிறார்.
அப்படித்தான் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை, ஒரு மாமன்னன் மாலிண்ட் என்பவன் தனது அரசவைக்கு அழைத்தான் . தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, எங்களின் அரசர் உங்களைக் காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.
நான் சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் “நான்சென்” என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.
தூதுவன் அரசரிடம் சென்று “நான் சென்” ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாகஒத்துக் கொண்டார். ஆனால் “நான்சென்” என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதையும் கூறினான் . மாமன்னன் ஆச்சரியமடைந் தான். “நான்சென்” வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு “நான் சென்” அவர்களே, வாருங்கள், வாருங்கள்!”எனவரவேற்றான்.
இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான் சொன்னதாக, நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.
அரசன், ” நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள். நீங்கள், நீங்கள் இல்லை என்றால், யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான். “நான் சென்” பின்னே திரும்பிப் பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?” “ஆம், அதுவேதான். இதுதான்” “தயவு செய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார். அப்படியே செய்யப்பட்டது. குதிரைகளை காட்டி, “அது ரதமா ?” என்று கேட்டார் நான் சென். அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.
துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.
“அந்த நுகத்தடித் தான் ரதமா?” என்று துறவி கேட்டார்.
“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.” துறவி கூற கூற, ஒவ்வொரு
பாகமாக கழற்றப்பட்டது ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, அரசரின் பதில்’ இது ரதமல்ல ‘ என்பதாகவே இருந்தது , கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.
துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்ட போதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப் போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.
அரசரிடம் ஒரு நிலை மாற்றம் நிகழ்ந்தது. துறவி
தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு: ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ?.
நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும் என்றார்.
மன்னா! “நான்” ஒன்றுமில்லை என்று வணங்கினான்.