அனுபவத்தினால் அடைவதே ஞானம்!

இந்த உலகியலில் நீங்கள் வாழும் வாழ்க்கைக்கும், செயலுக்கும் நீங்களே காரணம். நீங்கள் தான் இங்கு கதாநாயகர்கள்! நல்லது நடந்தால் நான் தான் காரணம் என்பீர்! கெட்டது நடந்தால்…

அனுபவத்தினால் அடைவதே ஞானம்!

இந்த உலகியலில் நீங்கள் வாழும் வாழ்க்கைக்கும், செயலுக்கும் நீங்களே காரணம். நீங்கள் தான் இங்கு கதாநாயகர்கள்! நல்லது நடந்தால் நான் தான் காரணம் என்பீர்! கெட்டது நடந்தால் எதிர் உள்ளவரை காரணம் என்பீர். தன் பிழைகளை ஏற்க மனம் பொறுப்பதில்லை. ஆகவே செய்யும் செயல்களில் மூலம் ஏற்படும் கருமத்தினை உணர்ந்து நடை பயிலுங்கள்.

உங்களின் வாழ்க்கை சடங்காக இருக்கிறது. திணித்த சடங்குகளை, அந்த செயல்களை பிடித்துக்கொண்டு மக்களுக்கு எதிரான செயல்களை செய்கின்றீர், அது தீங்கருமம், ஞானத்திற்கு தடை. உலகில் உத்தமம் எதுவெனில் இயல்பாக வாழ்வதே, பேதமின்றி மக்கள் தொண்டு செய்வது மட்டுமே! தன்னால் கிடைக்கும் முக்தி..

நல்லோர் அல்லாதோரை காண்பதும் தீதே.. தீயோர் என்று அறிந்தும் சடங்கிற்காக, அடங்காமல் போலி கௌரவம் பூணுவது மாபாவமே. உங்களுக்கு இறைவன் கொடுத்துள்ள வாழ்க்கையை கடைத்தேற முயலுங்கள். நீங்கள் செய்த நல்வினையாலே இவ்வாறு, இப்போது, இதை செய்ய வைத்துள்ளது என்பது உண்மையே! நீங்கள் அதனை நிறைவாக ஏற்று கொள்ளுங்கள்.

பலரும் தன்னை உணராமல், சுய நலமாக தன் கூட்டத்தை உயர்வாக கருதி வாழ்நது, இறை அனுபவம் கிட்டாமல் மாள்கின்றனர். பேதம் கற்பித்து பக்தியினை ஆதாயமாக்கி, மதம் பிடித்து அலைய வைத்திருக்கின்றார்கள். அத்தகையோர் கருமத்தின் வினையை முடித்து கொள்ள முயற்சித்து, முயற்சித்து, கருமத்திலே பல பிறவிகளாக உழன்டுக்கொண்டே இருப்பர்.

ஆகவே நீங்கள் அந்த வினையின் பதிவுகளை உணர்ந்து, சுயநலமின்றி பொது நலத்தோடு பயணியுங்கள், அந்த கருமங்கள் தன்னாலே முடித்து கொள்ளப்படும் என்பதை உணர்வீர்கள். பழைய பதிவுகள் அனைத்தும் அழிந்து, புதிய வாழ்வும், உங்கள் பதியை அடையாளம் காட்டும். சும்மா இரு என்ற தத்துவம் உணர்ந்து, எச்செயலுமின்றி நீக்கமற நம்முள் நிறைந்திருக்கும் நாதனை காண இயலும்.

தற்போது தியானம் என்று சொல்லி கற்று கொடுக்கிறார்கள், அது தியானமல்ல. ஏதோ ஒரு பயிற்சி. உடல் தூய்மையில்லாமல் யோகம் வராது, மனத்தூய்மை இல்லாமல் தியானம் வாய்க்காது. பற்றை துறந்தவனுக்கே பரமவிலாசம்… இப்போது பல அன்பர்கள் பேஷனாக செய்கிறார்கள், சொல்லி கொள்கிறார்கள்.

எந்த பயிற்சியும் ஆன்மீக முன்னேற்றம் தராது, ஒரு சிலருக்கு பிறவிப்பலனாக அமையும், அவ்வளவே. பயிற்சியால் அடைவதல்ல ஞானம், அனுபவத்தினால் அடைவதே ஞானம்! நீங்கள் நல்லவர்களே, உங்களை எப்போதும், செயலின் தன்மையறிந்து, நல்ல செயல்களில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்! மனித நேயத்துடன் பிரவினை இல்லாமல் எல்லோரையும் எதிர்பார்ப்பின்றி நேசியுங்கள். நல்லவர்களோடு பிணைந்து கொள்ளுங்கள், சித்தர்களின் பரிபூரண அருளை அடையப் பெறுவீர்கள் என்பது திண்ணம். இனிய ஜீவ அமிர்த காலை வணக்கம்

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்