உதவி செய்து வாழ்ந்தால் போதும்..!

உதவி செய்து வாழ்ந்தால் போதும்..!

இந்த உலகியலில் மாயையை வென்ற மகான்கள், தங்களின் ஞானக்கண்ணான அகக்கண் கொண்டு வாழ்வர். ஆனால், உலகிலியர் யாவரும் தங்களின் புறக்கண்களால் காண்பதைப் பெரிதெனக் கொண்டு, நிலையற்றது என்று தெரிந்தும், மனம் உணர்ந்தாலும் பற்றில் இருக்கவே விரும்புவர், அதனை விட்டு மீளாது பிறவிப் பிணியில் மாள்வர். அதனால், அவர்களின் மனத்தினை மாயை ஆட்கொண்டு நான் என்ற இயக்கத்தில் கலந்து விடுகின்றது. நீங்கள் மனமகிழ, உங்களின் சீவனை உங்களுள் உணர வேண்டும் எனில், நீங்கள் செய்யும் ஒவ்வோரு செயலும் பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நல்ல அறம் தலைப்பட்டால், உங்களின் குணம் மிளிரும்.

உங்களின் வினையின் பதிவே இப்போதைய வாழ்க்கை. நீங்கள் இப்படிப்பட்டவர் என்பதனை வேறெவரும், எந்த குருவும் சொல்ல வேண்டியதில்லை. அதுதான் உங்களுக்கே தெரிகின்றது. முன் வினையின் மூலம் பதிந்ததெல்லாம், இப்போது உங்களை தொடர்ந்து வருகின்றது என்பதனை உணர்ந்து முலாம் பூசாமல் இருந்தால் போதும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விடுவீர்கள். தீங்கருமத்தினை நீக்கி, நற்கருமத்தினை உங்கள் மனதில் விதைத்து, எண்ணத்தில் நினைத்து பயணித்தால் எல்லாம் கைக்கூடும்! உங்கள் எண்ணமே, உங்கள் வாழ்வு என்பதனை உணர்ந்தால் இன்ப துன்பம் என்னவென்பதை உணர்வீர்கள்.

எழில் நிறைந்த பிரபஞ்சத்தில் அத்தனையும் சுதந்திரமாகவே இருக்கின்றது. அத்தனையும் உணருகின்ற நாம் பேதங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே அனுகூலமான வாழ்வு. எல்லா உயிர்களும் தம்முயிராக கருதி, மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினை மனத்தில் ஏந்தி, இயலாதவருக்கு இதமான உதவிகளை எதிர்ப்பார்ப்பின்றி செய்து உளமாற வாழ்ந்தால் போதும். இந்த நிமிடமே கருமம் தொலைந்தது என்று பூரித்து உள்ளபடியே உள்ளம் மகிழ்வீர்கள், வாசியும் தென்றல் போலவே வீசும்! ஆக உங்களின் இயல்பில் விருப்பமாக வாழுங்கள்! உலகியலில் உங்கள் செயல்களில் தனித்திருங்கள், நல்ல எண்ணங்களை உருவாக்கவும், நல்லதை கேட்கவும் பசித்திருங்கள்! சமூக அவலங்களை கண்டு நமக்கென்ன என்று பயணிக்காதீர்கள், குரல் எழுப்புங்கள். எல்லா உயிர்களிலும் பஞ்சபூதமான இறைவன் இருக்கிறான் என்பதனை உணர்ந்து உயர்வு தாழ்வின்றி புண்படுத்தாமல், எப்போதும் விழித்திருங்கள்! என் கடன் பணி செய்வதே என்று பணிவுடன் அன்புடன் வாழும் போது, நீங்களே அவனாகிறீர்கள். இனிய ஆன்ம வாழ்வு நிச்சயம்.

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்