பிரபஞ்சத்தினை பணிந்து வணங்குங்கள்

பிரபஞ்சத்தினை பணிந்து வணங்குங்கள்

இந்த உலகியலில் பிரபஞ்சம் உங்களுக்கு வேண்டியது, வேண்டாதது என உணர்த்திக் கொண்டே இருக்கின்றது என்பது உண்மை. அத்தனை கருணை மிக்க இந்த இயற்கையான பிரபஞ்சத்தினை பணிந்து வணங்குங்கள். நீங்கள் எப்படியோ, இங்கு எல்லா உயிர்களும் அப்படியே! அப்படியிருக்க வேற்றுமை காண்பது இறையாண்மையல்ல! மனிதரைப் போன்ற தெய்வமுமில்லை, கொடும்பாதகரும் இல்லை! சுயநல வாழ்வை கருத்தில் கொண்டு நன்றி மறக்கும் மனிதர்கள் நாயினும் கீழானவர்கள்! இன்று அவர்களே பெரும் சான்றோர் போன்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு எல்லாவற்றிலும் முன்னே நிற்கின்றார்கள்! படி அளந்தவர் எல்லாம் பதுங்கி வாழும் காலமாக இருக்கின்றது என்று பலரும் வேதனைப்படுவதுண்டு, உண்மைதான்!

ஆதலால் நீங்கள் உணர்ந்த மனிதர்களை விட, இந்த அற்புத பிரபஞ்ச ஆற்றலை உணரும் போது, உங்களுடன் இந்த உலகிலுள்ள எல்லா உயிர்களும் தன்னுடைய உன்னதங்களை உணர்த்தும். அதன் தன்மை உங்களுக்கு தெளிவாக இலங்கும். உங்களை ஆராதித்து மகிழும். அந்த பேரானந்தத்தை உணர்ந்து, அந்த பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். தங்களை அடையாளப்படுத்தி போலி பெயரென்னும் பற்றை தொற்றிக் கொள்ள மாட்டார்கள். பெயர் கூட பற்று என்று நினைக்கும் மேலோரே சித்தர்கள். இன்று தாவி தாவி ஒவ்வொருவரும் தனக்கு பல அடைமொழி பெயர்களை வைத்துக் கொண்டு சித்தர்கள் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி செல்வத்துக்காக வலம் வருகிறார்கள்! 

ஆக  உண்மையான சித்தர்கள் தான் பெற்ற யோகங்களால், பெரும் மெய்ஞானத்தால்,  இந்த உலகத்தில் அவதரித்து வாழும் மக்களின் நலனுக்காக,  வாழ்க்கைக்கு தேவையான தத்துவம், மொழி, மருத்துவம், உணவு, வாழ்வியல் முறை, வான்வெளி கிரகங்கள்  என எல்லாவற்றையும் கண்டறிந்து உலகிற்கு சொன்னார்கள்.

இங்கு தான் உயிர்கள் வேறுபடுகின்றன. இங்கு பிரபஞ்சத்தை உணராமல், சுயநல பதர்களாக தன் தேவைக்காக மட்டும் வாழ்ந்து, பிறர் நலன் பேணாத எவரும் சித்தர்களின் பாதையை பயணிப்பதில்லை! பிரபஞ்சத்தின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் செயல்படுவதால் அவர்களின்  வாழ்க்கையில் தேவையற்ற கருமம் புகுந்து செயல்பட்டு இறையாண்மையை தடுக்கின்றது. அழிந்து போகும் பற்றுக்களின் மீதும், தேவைக்காகவும் வாழ்வதாலே, பிரபஞ்சத்தை உணர முடிவதில்லை.  ஆதலால் பிரபஞ்சத்தை உணர முயலுங்கள், இயற்கையோடு பேணி காப்பாற்றுங்கள்! பேசுங்கள்! வெட்டவெளியை ஆகாயத்தை சில நிமிடம் உற்று நோக்குங்கள். பரந்த பிரபஞ்சத்தினை நுண்ணிய அணுவில் உங்களுள் பின்னர் காண்பீர்கள். எந்த பிரச்சினைகளையும் பெரிதாக பார்க்காமல் இருங்கள், ஆக உண்மையில் உங்கள் ஆனந்தம் வெளியில் இல்லை உங்களுக்குள்ளே தான் இருக்கின்றது. உங்களால் உடலால் இயலாதவர்கள், பாதித்தவர்கள் பலரும் ஆனந்தம் கொள்ள பயணியுங்கள். எதிர்பார்ப்பை தவிர்க்கும் போது பிரபஞ்சத்தினை முழுமையாக உணரமுடியும் என்பதே உண்மை.

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்