Wisdom

மனத்தூய்மையே தூய்மை

புறத்தின் தூய்மையை நேசிக்கும் மனிதர்களே அதிகம். உண்மையை உள்ளபடி பேசும், நேசிக்கும் மனிதர்களுக்கு மதிப்பில்லை. ஆம்! பெரும் செல்வந்தர்கள் பெரும்பாலும் Status என்று சொல்லப்படும் தகுதியைப் பார்த்து பழகுவார்கள். மேற்கத்திய பண்பாடுகளைச் சொல்லி கௌரவம் கொள்வர். ஆனால் நம் தமிழர்களின் பண்பாட்டை மறந்து, அகத்தூய்மை இல்லாது வாழ்வர். இந்த பருவுடலை  நாம் ஏன் தூய்மையாக வைத்து கொள்கிறோம் ? உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லை எனில் துர்நாற்றம் ஆரம்பித்து விடும். உள்ளுறுப்புகளில் தூய்மையில்லை என்றால் வியாதிகள் உடனே தொற்றிக் கொள்ளும். எனவே எப்பொழுதும் உடலை நாம் தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் தருகிறோம். காலையில் எழுந்தவுடன் கண்ணைக் கழுவி சுத்தம் செய்கிறோம், பிறகு பல், பிறகு குடல், பிறகு இந்த உடல் என்று அனைத்தையும் சுத்தம் செய்கிறோம். ஆடைகளை துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். தலைக்கு எண்ணெய் தடவுகிறோம், பவுடர் பூசுகிறோம் பல விதமான ஒப்பணைகள் வேறு செய்து கொள்கிறோம்.

என்றோ ஒருநாள் அழிந்து போக வேண்டிய, துர்நாற்றம் உடைய இந்த பருவுடலுக்கு எத்தனை கர்வம், அகந்தை, ஆணவம், பொறாமை. அந்த உடலை சில நாட்கள் தூய்மை செய்யாமல் விட்டு விட்டால் நம் அருகில் எவரும் வரமாட்டார்கள் அல்லவா? மனைவியும் மற்றவரும் கூட முகம் சுளிப்பர் அல்லவா?

ஒருபுறம் அப்படியிருக்க, மறுபுறமான அகத்தூய்மை என்பதே மனிதர்களை மேன்மை படுத்தும் என்பதே சித்தர்கள் வாக்கு. சிலர் மனத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல், அவர்களின் கருமத்தால் கொடுக்கப்பட்ட பொறுப்பை கவனித்து கருமஞ் செய்யாமல், வஞ்சகமான நெஞ்சை வைத்துக் கொண்டு வீண்விவாதம் செய்து வருவார்கள். தனக்கு நிகர் எவருமில்லை என்பார்கள், திடீரென்று காரியமாக ஏளனம் செய்தோருடன் எக்கர்ணம் அடித்துக் கொண்டு கைக்கோர்த்து நிற்பார்கள்.

நேரத்திற்கு நேரம் நிறம் மாறும், மனத்தூய்மை அல்லாத அற்ப மனிதர்களைச் சுற்றி, எதிர்மறை எண்ணங்கள் பன்மடங்கு அதிகரித்து இயங்கி கொண்டே இருக்கும். அதில் மாய உலகின் வெற்றி கூட அடையலாம். ஆனால் அவை யாவும் நிலைத்து நிற்காது. அந்த அற்ப மனிதர்களிடம் பெறக்கூடிய பொருள், உணவு எல்லாமே, தொடர்பு கொள்வோரை தொற்றிக் கொள்ளும். எதிர்மறை எண்ணம் கொண்ட பாதகர்கள், எழ முடியாமல் அறியாமையில் வீழ்வர், பாதிப்பை நீக்க வழியின்றி மாள்வதும் திண்ணம். திடீரென்று ஒரு நாள் எதிர்மறை அதிகமாகி அவர்களை அந்த எதுர்மறையே உடைத்து மரணித்து  விடும். ஆனால் தேவையை எதிர்பார்க்கும் மனமானது அதைப் பற்றி கவலைப்படுவதேயில்லை.

உண்மையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது மனத் தூய்மையைக் குறித்துதான். ஒருவர் எவ்வளவுதான் உடல் சுத்தமானவராக, அழகானவராக, வலிமையானவராக இருந்தாலும் அவரது மனம் சுத்தமாக இல்லை என்றால் மற்ற சுத்தங்களினால் யாதொரு பயனுமில்லை. சரி, மனம் எதனால் அசுத்தமாகிறது ? மனதை அசுத்தப்படுத்துவது எது ? யோசித்துப் பாருங்கள் !!!

உள்ளுக்குள்ளே குமுறும் பேராசைகள், தேவையற்ற கோபங்கள், அர்த்தமற்ற ஆணவம், பிறரை வஞ்சிக்க எண்ணுதல், தேவைக்கும் இசைக்கும் நிறம் மாறுதல், பெரியவர்களை மதிக்காமல் இருத்தல், நல்லது செய்வதை எதிர்த்து அஹங்காரம் கொள்ளுதல், பொறாமையுணர்வுடன் பொறுப்புணர்வு இல்லாமல் இருத்தல் போன்ற தீய குணங்களால்தான் மனம் அசுத்தமடைகின்றது. அவற்றை விட்டு விலகுவதே மனத் தூய்மையாகிறது.  நீங்கள் உடலை சுத்தமாக வைப்பதற்கு நாளெல்லாம் பாடுபடுகிறீர்கள். ஆனால், மனதைச் சுத்தம் செய்வதற்கு அவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டியதேயில்லை.

அது வெகு எளிது. பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இந்த உணர்வுகள் மனதில் தோன்றும் பொழுதெல்லாம் அவற்றை புறக்கணித்து விட வேண்டும் அவ்வளவுதான். பாருங்கள் எவ்வளவு எளிது !! அது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் இது போன்ற உணர்வுகள் தோன்றாத வண்ணம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆதி சங்கரர் சொல்லும் பொழுது ”சித்தஸ்ய சுத்தயே கர்மா” என்பார். அதாவது நமது எண்ணம், சொல், செயல்கள் யாவுமே மனதில் தூய்மையை ஏற்படுத்தும் விதமாகவே இருக்க வேண்டும். மனத் தூய்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருக்கக் கூடாது. பிறரின் எதிர்ப்புக்கு  எதிராக நடக்கக்கூடாது.

பட்டினத்தார் தனது பாடலில் ”நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுள்ளதோ ? என்று இறைவனிடம் கேட்பார். வள்ளல் பெருமானோ

”ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை

மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வுனான் வாழ வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டுவார்.

ஆக இத்தகைய நல் வாழ்வை, அற வாழ்வை வாழும் பொழுது இயல்பாகவே மனமானது தூய்மை பெற்று விளங்கும். இன்றிலிருந்து நான் பொய் பேச மாட்டேன், பிறர் பொருள் மீது ஆசை கொள்ள மாட்டேன், யாருக்கும் உடலாலும், மனதாலும் தீங்கு செய்ய மாட்டேன், தான் பெற்ற குழந்தைகளை சிறப்பாக வளர்த்து நாட்டிற்கு தருவேன் என்ற நல்ல சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு அதன்படி உறுதியாக நில்லுங்கள். உங்கள் மனமானது இயல்பாகவே துய்மை பெற்று விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button