Siddhar

சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்

திருச்செந்தூரில் கோயில்கொண்டு எழுந்தருளிய ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள், நடமாடிய காலத்தும், கோயில்  கொண்டருளிய பின்னும் தம் அருளாற்றலை நிகழ்த்தி வருபவர்.

சுவாமிகள் திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் நல்லமுத்துப்பிள்ளை, பொன்னம்மாள் எனும் பெற்றோருக்கு மூன்றாவது மகனாய் கி.பி.1880ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி, விக்ரம ஆண்டு ஆனிமாதம் ஞாயிற்றுக்கிழமை அவதரித் தார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்டபெயர் கனகசபாபதி என்பதாகும். சுவாமிகள் தமது தாய் மாமனுடன் புதுச்சேரி சென்று, அங்கு கல்வி பயின்று  புலமை பெற்றார்கள்.

1901ம் ஆண்டு சுவாமிகளுக்கும் சொர்ணத்தம்மாள் என்னும் மங்கைக்கும் திருமணம் நடந்தது.

தொடக்கத்தில் புதுச்சேரி பக்கம் கணக்குப்பிள்ளை வேலைப் பார்த்த சுவாமிகள், பின்னர் ஊர் திரும்பி 1904ல் பள்ளிக்கூடம் ஆரம்பித்து, அங்கே அரசு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

1915 ல் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேகம் காணச்சென்ற சுவாமிகள் திரும்பி வரவில்லை. ஓர் ஆண்டு கழித்து சுவாமிகளைத் தேடிப்பிடித்து அழைத்து வந்தனர்.

சுவாமிகள் அறநூல்களைப் படிப்பதில் நாட்டம் மிகுந்திருந்தார்.

ஒருநாள் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு  சென்ற சுவாமிகள்  திரும்பிவரவே இல்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தும் பயனில்லை. 12 ஆண்டுகள் கழித்து 1928 ல் திருச்சிராப்பள்ளி நந்திக்கோயிலில் தவக்கோலத்தில் உள்ள நிலையில் சுவாமிகள் கண்டறியப்பட்டார்கள்.

உறவினர்கள் பலரும் வந்து அவரை தரிசித்தனர். அதன்பின் சுவாமிகள் ஆம்பூர்பட்டி, வாதிரிப்பட்டி, திருச்சி போன்ற இடங்களுக்குச் சென்றுவருவதும் சில நாள்கள் அங்கே தங்கியிருப்பதுமாக இருந்தார்கள்.

விராலிமலை சந்தைப் பேட்டையிலுள்ள வன்னி மரத்தடியிலும் மலையிலும் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். அனைவரும் அவரை ‘வன்னி மரத்து சாமி’ என்று அழைத்தனர்.

நோயாளிகளுக்குப் பச்சிலை, திருநீறு கொடுத்தும், வலிப்புநோய் போன்ற கடுமையான நோய்களையும், பாம்பு கடித்து உயிருக்குப் போராடுபவர் களையும் நலமுறைச் செய்திருக்கிறார் இவர். மிகுந்த தவ ஆற்றல் மிக்கவராயும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலிருக்கும் நிகழ்வையும் நிகழ்த்தியுள்ளார்.

சுவாமிகள் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் ஏராளம். 

1935ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டிக்குத் தெற்கே ஒரு பட்டுப்போன தான்றி மரத்தை சுவாமிகள் கண்டு அவ்விடத்தில் திருவுளம் கொண்டு தங்கியிருக்கலானார்.

இந்நிலையில்…. சுவாமிகள் தங்கியிருந்த இடத்திலிருந்த பட்டுப்போன தான்றி மரம் துளிர்க்கத் தொடங்கியது. கிளைகள் விட்டுப் படரத் தொடங்கிய அம்மரத்தைச் சுற்றி மேடையமைக்கப்பட்டது.

அன்றுமுதல் இன்றுவரை அந்த தான்றி மரத்திற்கு வழிபாடுகளும், அன்னதானங்களும் நடைபெற்று வருகிறது.

1938 ஆம் ஆண்டு மே மாதம் வைகாசி விசாகத்தன்று சுவாமிகள் திருச்செந்தூர் சென்றார்கள். அங்கே அவருக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் போனது. சுவாமிகளுக்குத் தாம் பரிபூரணமாகும் வேளை நெருங்குவது தெரிந்தது.

திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த வாதிரிப்பட்டியில் தோன்றி, பல கலைகளும் உணர்ந்து. இல்லறமேற்று மக்கட்பேறுகள் எய்தி, பின் துறவறம் பூண்டு, சிறந்த அருளாளராக விளங்கி, அற்புதங்கள் புரிந்த கனகசபாபதி எனும் இயற்பெயர் கொண்ட சத்ருசம்ஹார சுவாமிகள், கி.பி.1938 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் வெகுதான்ய ஆண்டு புரட்டாசி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் பரிபூரணமானார்கள்.

கிழக்கு நோக்கிய ஜீவசமாதி ஆலயம். கருவறையுள் சிவலிங்கத் திருமேனி பிரதிட்டை. சன்னதியில் சுவாமிகளின் புகைப்படமும் உள்ளது. புரட்டாசி பரணி குருபூஜை.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மகிழ மரத்தடியில் சுவாமிகள் பல மகிமைகள் செய்த வண்ணமாய் இருக்கின்றார்கள். சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் அமைந்த இடங்கள் யாவுமே மிகவும் மகிமைகள் வாய்ந்தவை என்பது கண்கூடு. குருவினைப் போற்றுவோம்! வணங்குவோம்!.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button