Daily ThoughtsExclusive

உண்மையான அன்பு எப்படி கிடைக்கும்..?

எல்லா இடத்திலும் எதிர்ப்பார்ப்புள்ள பாசத்தை அன்பென்று கருதும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   உறவுகள் தரும் பொருள்கள் சுகத்தையும், சலுகைகள் பெறுவதையும் அன்பென்று கருதுகிறார்கள். ஆக எதிர்பார்ப்புள்ள அன்பைத்தான் பாசம் என்கிறார்கள்! பாசம் கட்டுக்குள்ளானது, எதிர்பார்ப்பிற்குரியது. தாய்,தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லாமே இப்படித்தான் பாசத்தில் இருப்பர்! நாம் செய்வதை நாமும் அன்பென்று கருதுவோம்!!

ஆனால் அன்பு அவ்வாறில்லை, தன்னிடம் இருப்பதை எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி, பிறர் நலன் கருதி செயல்படுவது!  குடும்பம், உறவுகள் மற்றும் நட்புக்கள் அனைவரும் பிறர் நலன் பேணும் அன்பை, பண்பை பெற்றவரானால் நாம் பாக்கியசாலிகளே! ஆனால் கோடியில் ஒருவருக்கே அது அமையப்பெறுகின்றது.

நல்ல ஆன்ம நிறைவுக்குரிய தொண்டாற்றும்   அன்பர்களுக்கு பெரும்பாலும் ஞானசூன்யங்களே அமையும்.  நல்ல ஆன்மாவின் செயலை, நிலைதனை உணராமல்  குழப்பங்களை ஏற்படுத்தி, தங்களைத் தாங்களே உயர்வாக கருதிக்கொண்டு, தான் என்ற அகந்தையுடன் ஞானத்தை வெவ்வேறாய் பார்ப்பதயாய் இருப்பார்கள். இது மானிட இனத்தின் நீதி! தமக்கு சாதகமாக இல்லாததைப் பெரிதுப்படுத்தி, பல்வேறு தீண்டாமை உருவாக்கி, நல்ல உள்ளங்களின் மனத்தினை பாதிப்படையச் செய்த மனுநீதியை, பலர் அன்பு என்ற பெயரில் ஊனம் கொண்டு தாண்டவமாடுகிறார்கள்.

பிற உயிர்களை பாரபட்சமின்றி அன்பு செலுத்தி, மதம் மாச்சர்யம் நீக்கி நீங்கள் மலர்ந்தபோதே, அதுவே உலகின் பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து, ஏதோவொரு சடங்கு சம்பிரதாயத்தை கடைப்பிடித்துக் கொண்டு, என்ன செய்கிறோம் என்று உணராமல் வாழ்வது  தர்மமிகு வாழ்வல்ல! பிறர் நலன் பேணி, பிறரை தாழ்த்தாமல், தம்மை வளர்த்த தமிழை வணங்கி,  எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் தொண்டு செய்வதை நிறுத்தாமல், நிந்தனை செய்தாலும் அன்பாய் இருப்போருக்கு பிரபஞ்சம், நினைத்ததை சாத்தியமாக்கும். அண்டத்திலும், பிண்டத்திலும் கலந்தருளும் பிரபஞ்சத்திற்கு அத்தனையும் தெரியும். அதுவே அவர்களை வழிநடத்தி அருள்மழை பொழியும். உங்களின் தேவைகளை, செயல்களை அதுவே முடிவு செய்யும்.

அன்பு நிலைத்து விட்டால், ஆன்ம வாழ்வில் பிறரின் இதயங்களில் நீங்கள் வாழ்வதை கண்டு நீங்களே அதிசயிப்பீர்கள். அதனால் உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடும். அன்பும் அரணும் பண்பும் இல்லாமல் புராணம்,மதங்களைப் பேசி காவி கட்டி, தண்டம் ஏந்தி, தான் என்ற அகந்தையுடன் சபைதனில் வரும் வேடதாரிகளுக்கும், கார்ப்பரேட் சாமியார்களுக்கும் ஆன்ம முக்தி கிடைக்காது. மதத்தின், சாதியின் பெயரால் வாழ்ந்து,  பலரால் தூற்றப்பட்டு, சிலரால் மதிக்கப்பட்டு இறுதியில் பிணமாவார்கள்.

ஆகவே உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் அன்பின் வழியில் செல்ல, எல்லா உயிர்களும் கைகூப்பி தொழும். அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்க காரணமாய் திகழ்வான்! ஆகவே நாம் எதிர்பார்ப்பில்லாத அன்பாய் இருப்போம், ஏகனை அடைய வழியை காண்போம்.

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button