Daily Thoughts

உங்கள் கடமையை நீங்களே செய்யுங்கள்..!

இந்த உலகியலில் உண்மையை சொல்லி, எத்தனை உண்மையாக இருந்தாலும், உங்களின் எண்ணம், செயல், மனம் போன்று மற்றவருக்கு இருக்க முடியாது! உங்களை சிலர் ஏற்காததற்கு காரணம்? நீங்கள் உண்மையான குணத்தின்பால் இருப்பதால் அவர்கள் மனம் அவ்வாறு ஏற்பதற்கு தடுக்கப்படுகிறது! அவரவர் காணும் ஒப்பீட்டுக்கு எவராலும் பயணித்து வாழ்வது இயல்பே! எல்லாம் அறிந்தோர் போன்று பகல் வேடங்களில்தான் பலரும் வாழ்கின்றார்கள்.

ஆக நீங்கள் உலகம் போற்றும் உன்னத காரியங்கள் செய்ய முனையுங்கள். இங்கு யார் அவர்? என்ன அவர்? என்ற கேள்வி தொடுக்கும் சாதி, மதம் சார்ந்தவர்களால், தடையை மீறி பலரால் வெற்றி காண முடிவதில்லை என்பது உண்மை! சிலருக்கு மட்டும் பாராட்ட மனம் இருக்கும், நற்செயலுக்கும் துணையாக இருப்பார்கள்! ஆனால் தன்னுடைய குண பேத சம்பிரதாயத்திற்கு இடையூறாக இருந்தால், நீங்கள் எத்தனை நல்லவராக நற்காரியங்கள் செய்தாலும், அவர்கள் உங்களை அவமதிப்பார்கள். ஆக எதிர்பார்ப்பை விட்டு விடுங்கள்.

பலரும் இங்கு குறுக்கு வழியில் வாழ்ந்து, பல ஏச்சு பேச்சுக்களை காதில் வாங்கிக்கொண்டு, மானத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டு வெட்கமின்றி கௌரவமாக பெரிய மனிதர்கள் போர்வையில் வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். போலியான நட்பும் உறவும் அந்த அற்ப செல்வத்தை எதிர்பார்த்து ஆதாய உறவிலே அவர்களை பயணிக்க வைக்கும் என்பதையும் உணர மாட்டார்கள். ஆதலால் அவர்கள் எல்லோரும் இறையிடம் ஏமாளிகளே!

அவ்வாறு இருக்க, நீங்கள் எதற்கும் எந்த வினைக்கும் அஞ்சாதீர்கள், கோபப்படாதீர்கள். மாறாக உங்கள் மனதை குழப்பும் பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் இருங்கள். மக்கள் ஒவ்வொருவரும் ஆதாயம் எதிர்பார்த்து பயணிக்கிறார்கள், அவர்களை உணருங்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்போர் ஆபத்தானவர்கள். ஆக உங்கள் கடமையை எதிர்பார்ப்புன்றி நீங்களே செய்யுங்கள். உங்களை அண்டியவரின் குழப்பங்கள், கருமங்கள் நீக்கும் வழியை சொல்லுங்கள்! படிப்படியே நாகரீகமற்ற மனிதர்களின் சுற்றமும் தன்னாலே மறையும்! எவ்வித எதிர்பார்ப்பின்றி உங்கள் நல்ல செயலுக்கு உறுதுணையாக நிற்கும் அன்பர்களுக்கு மட்டும் வழி காட்டுங்கள்! உங்களை மாற்ற நினைப்பவரிடம் கவனமாக இருங்கள்! ஆனால் உண்மையான( ஒன்றென கருதி, காலநிலை செயலை உணர்ந்து எதிர்பாராத) அன்பு உள்ளவர்களின் பாதிப்பை தமதாக கருதுங்கள்!

உங்கள் வாழ்வின் பயணத்தில் கீழ் கண்ட வாசகங்களை மனதில் பதிந்து கொள்ளுங்கள்!

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞானத்தின் மாணப்பெரிது” என்பது குறள்! உங்களை தேடி வந்து, கேட்காமலே பிரதிபலன் பாராது உதவி செய்பவர்களை நீங்கள் மறந்து விடக்கூடாது! இந்த காலத்தில் நன்றியை காண்பது அரிது என்பார்கள். ஆனால் நன்றியை எதிர்பாராமல் எதையும் கடமையாக செய்வதால் நீங்கள் கரும் வினையின் பதிவை அழிக்கின்றீர் என்று பொருள்!! பின்னர் அதையும் மறந்து விடுங்கள்!

இயற்கையை மதித்து, இயல்பாக இருந்து, கர்வ வஞ்சனை புறஞ்சொல்லல் தவிர்த்து, எல்லாம் பிரபஞ்சத்தின் சித்தாடல் என்பதை உணர்ந்து பணிந்து வணங்கி நல்லதை மட்டும் செய்யுங்கள்! இங்கு உங்களுக்கு ஏற்றவாறு எல்லோரையும் மாற்ற இயலாது. நீங்கள் உங்களுக்கு சம்மந்தம் அல்லாததை தேவையற்ற ஆராய்ச்சிகள் செய்து எவரையும் எடை போடாதீர்கள். உண்மையில் பிரபஞ்சத்துடன் கலந்து, மக்களை காக்கும் நற்செயல்கள் செய்பவர்களை மதியுங்கள்!

உங்கள் மனதில் நல்லவற்றை மட்டும் ஆழமாக உள்ளாற சொல்லிக் கொண்டே இருந்தால் போதும். அது எப்படி சரியாகும் என்று அந்த வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்! ஏனெனில் உங்களுக்கு தெரிந்தது ஒரு சில வழிகள் தான்! , ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றது. அது எப்படியும் சரி செய்து விடும். ஆதலால் பிரபஞ்சத்தினை உணர்ந்து வணங்குங்கள். அதனால் கருமம் தீரும்! உங்கள் நேர்மறை எண்ணங்களின் மூலம் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்மறை எண்ணம் கொண்டோரிடம் விலகுங்கள்.

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் எனக்கு அதிசயம் நடக்கும், அந்த எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சம் என்ற இரகசியமே இறை இரகசியம் என்று உணர்ந்து நன்றியை மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். இதுவே சக்திவாய்ந்த செயல்முறையாகும். உங்கள் வார்த்தைகள், செயல்கள் பிறருக்கு சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தரும்! இறை உணர்வுகள் மற்றும் அதன் எண்ணங்கள் எல்லாவற்றையும் சரி செய்துவிடும். உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது! உங்கள் எண்ணமே ஜெயம் தரும்!

– ஜீவஅமிர்தம். கோ. திருமுருகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button