Siddhar

ஸ்ரீ சச்சிதானந்த சாமிகள்

தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் உடைய கம்பம் பள்ளத்தாக்கினுள்ளும், கம்பத்திலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ளது சுருளிமலை. இந்த மலையில் தோன்றும் நீர்விழ்ச்சிக்கு ‘சுருளி நீர்வீழ்ச்சி என்று பெயர். இத்தகு எழில் பொழிவைக் கொண்ட சுருளி மலைக்கும் தேனிக்கும் இடையே உள்ள சிற்றூரே கொடுவிலார் பட்டி.  இத்தகைய சீர்மிகு ஊரில் குழந்தைவேலு, பேச்சியம்மாள் தம்பதியருக்கு கி.பி.1878 ஆம் ஆண்டு சாமிகள் மகனாகப் பிறந்தார். சாமிகளின் பிள்ளைத் திருநாமம் பழனியாண்டி என்பதாகும். தம்முடைய 60வது அகவையில் துறவறம் வாங்கிய பின் ஏற்பட்ட பெயரே சச்சிதானந்த சாமிகள்.

சாமிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்வித்தனர். இவர் (மனைவி) மகப்பேறு ஏதுமின்றி, இயற்கை எய்தியதன் காரணமாக, இவர் மீண்டும் மறுமணத்தில் நாட்டமின்றி சந்நியாச மரபைப் பின்பற்ற விரும்பினார். அக்காலத்தில் சுருளிமலை செல்லும் ஞானிகள், அருளாளர்கள் யாவரும்,  முதலில் கொடுவிலார்பட்டி பழனியாண்டியின் வீட்டில் (பிற்காலத்தில் அந்த இடமே சச்சிதானந்தத்தின் ஆசிரம மானது) சில நாட்கள் தங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.  அவ்வகையில் வந்த மகான்களில் மிகச்சிறந்த ஒருவரே சொக்கலிங்க சாமிகள்.

சொக்கலிங்க சாமிகள் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேயர் ஆட்சியில், சேலத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். நிர்வாண அவதூத ஞானி ஒருவரால் தன்னிலை உணர்த்தப்பட்டு பல காலம் திருவண்ணா மலையில் தங்கி பக்குவ நிலையடைந்தார். அப்பொழுது முன்பின் அறியாத ஒரு சாது, சொக்கலிங்கத்தைப் பெயர் சொல்லி அழைத்து, சுருளிமலைக்குச் சென்று தவம் செய்யக் கூறினார். சுருளிக்குச் சென்ற சொக்கலிங்க சாமிகள் கொடுவிலார்பட்டி பழனியாண்டி இல்லத்தில் தங்கினார்.

சொக்கலிங்க சாமிகளையே குருவாக ஏற்று பழனியாண்டி சாமி ஞானநிலையில் வல்லவரானார். சொக்கலிங்க சாமிகள் பல அமானுஷ்ய சித்துக்களையும் கற்றுக் கொடுத்தார். சொக்கலிங்க சாமிகள் வற்புறுத்தலின் காரணமாகப் பழனியாண்டி சாமி. குருவம்மாள் என்பவரை மணம் புரிந்தார். இத்தம்பதியருக்கு கடைசி மகவாகப் பிறந்தவரே பரஞ்ஜோதி சாமிகள். சொக்கலிங்க சாமிகள் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்தார். குருவின் மறைவுக்குப் பின் ஞான மார்க்கத்தில் முன்னேறிய பழனியாண்டி சாமிகள், அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றார்.

சாமிகள் ஆசிரமத்தில் எப்போதும் அன்ன தானம் முடிவற்று நடந்து கொண்டிருக்கும். ஒரு முறை நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, உணவுப் பங்கீட்டுமுறை அமுலிலி ருந்து, பஞ்சகாலத்தில் அரிசி கிடைக்காமல், மக்கள் யாவரும் சோளம் போன்ற தானியங் களை உண்டு வாழ்ந்தனர். ஆனால் கொடு விலார்பட்டியில் பழனியாண்டி சாமிகள், அரிசியைப் பொங்கி, அன்னதானம் செய்து வந்தார். அதனால் வெள்ளைய அதிகாரிகள், சாமிகள் அரிசியை பதுக்கி வைத்திருக்க வேண்டும் எனக்கருதி, சாமிகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆசிரமத்திற்குள் நுழைந்தனர்.

சாமிகளை அழைத்து, உனக்கு மட்டும் அரிசி எப்படிக் கிடைத்தது? என்று வினவினர். சாமிகள், “இது ஆண்டவன் கொடுத்த அரிசி” என்று இரண்டு கைகளையும் மேல் நோக்கிக் காட்டினார். அப்பொழுது கூரையிலிருந்து அருவியைப் போல அரிசி கொட்டியது. குன்றுபோல் குவிந்தது. இந்த அதிசயத்தைப் பார்த்த அதிகாரிகள் சாமிகளின் ஆற்றலை உணர்ந்து வணங்கிச் சென்றனர். இத்தகு ஆற்றல் பெற்ற சாமிகள் மருத்துவத்திலும் தேர்ச்சிப் பெற்று விளங்கினார்கள். தம்மை அண்டி வந்தவர்களுக்குத் திருநீறும், பச்சிலைகளும், கொடுத்து அவர்தம் நோய்களைக் குணப்படுத்தினார்.

பேரருளாராக விளங்கிய சாமிகள் தம் தொண்ணூற்று ஒன்பதாவது வயதில் 15.08.1976 அன்று பரிபூரண மானார்கள். சாமிகள் மறையும் முன், பன்னிரெண்டு ஆண்டுகள் சென்றபின் திறந்து பார்க்கச் சொன்னார். ஆனால், சாமிகளின் சீடரும் மகனுமான பரஞ்சோதி சாமிகள் பதினான்கு ஆண்டுகள் கழித்தே சமாதியைத் திறந்தார். அப்பொழுது 14 ஆண்டுகளுக்கு முன் சமாதியில் வைக்கும்போது சாமிகளின் ஸ்தூலத் திருமேனி எவ்வாறு இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கக் கண்டார். அதன்பின் சாமிகள் அறிவுறுத்தி சொல்லியபடி சமாதிக்கோயில் எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button