Siddhar

பரம்பொருள் பாம்பன் சுவாமிகள்

எய்தற்கரிய அருட்சுடரை  இதயத்தில் கொண்டு செய்தற்கரிய திருநூல்கள் பல இயற்றி உய்தற்கரிய வழி உணர்த்திய பெருமான் பாம்பன் சுவாமிகள் ஆவார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் எனும் சிற்றூரில் பிறந்தவர்தான் பாம்பன் சுவாமிகள். இவரது இளமைப்பெயர் அப்பாவு. சாத்தப்பபிள்ளைக்கும் செங்கமல அம்மை தம்பதிக்கும் கி.பி.1857ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைதான் சுவாமிகள்.

பள்ளியில் அப்பாவு படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சந்நியாசி ஒருவர் கந்த சஷ்டிக் கவசத்தை கொடுத்துச் சென்றார். கந்த சஷ்டிக் கவசத்தைப் போல, நானும் ஏன் பாடக்கூடாதென எண்ணிய அப்பாவு ஒருநாள் ஒரு தென்னந்தோப்பில் கத்தி கொண்டு பனை ஓலையை எழுத்தாணிக் கத்தி கொண்டு சீவி ஏடாக்கி, குமாரபகவானே.முருகப்பெருமானே. அருணகிரிக்கு அருளியது போல அடியேனுக்குள் அருள வேண்டும். உன்னையே என்பாடல் பொருளாக்க வேண்டும். அருள்வாய் குகனே என பிரார்த்தித்து எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதத் துவங்கினார்.

‘கங்கையைச் சடையிற்பறித்து’ எனும் மங்களமொழி மனதில் தோன்ற பிரவாகமாகியது. பாடல் பொங்கியது. குமரகுருதாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டு குளக்கரை கடற்கரை என பாம்பனில் பல இடங்களுக்கும் தனியே சென்று தியானித்து வந்தார். பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமானை நாளும் பொழுதும் பாடிக் களித்து வந்த குமரகுருதாசனுக்கு இருபத்தேழாம் வயதில் திருமணம் செய்வித்தனர். அவரது பெற்றோர்கள் திருமணம் செய்த போதிலும் இல்லறத்தில் நாட்டமின்றி பாம்பனில் இருந்து வந்த காலத்தில் பல்வேறு அற்புதங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தன. திருமணம் முடித்தலுக்கு முன்பு ஒரு நாள் இவரது கனவில் அழகிய திருமேனிச் சைவரொருவர் தோன்றினார். பாம்பன் சுவாமிகளை ஒன்றரைமைல் தூரம் வரையிலும் அவர் அழைத்துச்சென்று ஒரு கட்டடத்தில் நுழைந்து வாழையிலை விரித்து அன்னமும் பாலுமிட்டு பிசைந்து “அன்பா! என்னோடு இதனை உண்பாயாக” என்று கூறினார்.

பாம்பன் சுவாமிகளும் அந்த சைவப்  பெரியவர் வேண்டுகோளுக்கிணங்க அந்த அன்னத்தை உண்டார். அதன்பின் அவர் “அன்பா! இனி நீ உன் இருப்பிடம் நோக்கிச் செல்வாயாக” என்று கூறி மறைந்து விட்டார். கனவினில் பாலன்னம் உண்டபாம்பன் சுவாமிகளுக்கு கவிபாடும் சக்தி அதன்பின் அருவியாகக் கொட்டியது. பாம்பன் சுவாமிகளுக்கு முருகைய பிள்ளை என்ற மூத்த மகனும் சிவஞானம்மாள் என்ற பெண்ணும் குமரகுருதாச பிள்ளையென்று இன்னுமொரு ஆண் பிள்ளையும் பிறந்தனர்.

இவர் பாடியருளிய ‘சண்முக கவசம்’ மக்களிடையே பெரும் புகழ்கொண்டது. சுவாமிகளுக்கு நிறைய சீடர்கள் பெருகினர். ஒரு விநாடியும் நெஞ்சில் நீங்காத முருகப் பெருமானை பல்வேறு செய்யுள் நூல்களால் பாடிக்களித்துப் பரவசம் கொண்டார் சுவாமிகள். ஒருமுறை வாந்திபேதி என்னுமொரு நோய் மூன்று நாட்கள் சுவாமிகளைப்பற்றி ஆட்ட இறந்த சவம் போலாகி விட்டார் அவர். நள்ளிரவுப் பொழுதில் அவரது மனைவி காளிமுத்தம்மாள் கதறி அழுதார்கள். அப்போது ஒரு காஷாயம் கட்டிய துறவி அங்கு தோன்றி ‘உன்னை நான் விட்டகல வில்லை’ என்று கூறி ‘மாடத்திலுள்ள திருநீற்றை எடுத்து அவர்மீது பூசு’ என்றார். காளிமுத்தம்மாள் திருநீற்றை எடுத்து கணவருக்குப் பூச குணம்பெற்று எழுந்தார் அவர். பாம்பன் சுவாமிகள் பல ஸ்தலங்களுக்கும் சென்று வணங்கி பாடல்கள் அருளி வந்தார். ஒருமுறை இராமேஸ்வரத்தில் சிவாலய வழிபாடு செய்யும் பொழுது உடையும் உடம்பும் அழுக்காதல் கூடாதெனும் கருத்தால் நிறைபடியே கைகூப்பித் தொழுதார். அன்று கனவில் இறைவன் தோன்றி ‘நீ சிவாய வழிபாட் டிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்’ என்று கட்டளையிட்டு மறைந்தார்.

பாம்பன் சுவாமிகள் மிகவும் உளம் நெகிழ்ந்து போய் “நான் இறைவனை வணங்கும்அன்மையை அறிவிக்க நேரில் தோன்றியதை எந்நாளும் மறக்கமாட்டேன்” என்று கூறி அதன்படியே அதன்பின் நடந்து கொண்டார்.

பாம்பன் சுவாமிகள் ஒருமுறை பிரம்பன் வலசை மயானத்தில் முப்பத்தைந்து நாட்கள் நிஷ்டையில் இருந்தார்.  பிரம்பன் வலசை மயான வெளியில் ஒரு கொட்டகை ஏற்பாடு செய்து அதன் நடுவில் ஒரு மனிதர் மட்டும் இருக்கக்கூடிய அளவில் சதுரக்குழியொன்று வெட்டி பெரிய முள்வேலி நாற்புறமும் நாட்டப்பட்டு மேல்புறத்தில் நிலைக்காலும் கதவும் இடப்பட்டன.

பாம்பன் சுவாமிகள் கடவுளை மறவாதிருங்கள் என்று கூறிவிட்டு அந்தக் குழிக்குள் இறங்கி தியான யோகத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு பகலில் ஒரு  பெரிய நாகம் அவரிருந்த குழிக்குள் இறங்கியது. அவரது சக்திக் கனலால் பாம்பு அப்படியே நகர்ந்து விலகிவிட்டது.

அதன்பின் அந்த மயானத்து ஆவிகளும் பாம்பன் சுவாமிகளின் நிஷ்டையை கெடுக்க முனைத்து தோற்றுப் போயின. ஆறாவது நாள் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்திலிருந்த போது நீ எழுந்துவிடு என்னும் அசரீரி ஏற்பட்டது.

பின்னர் சுவாமிகள் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இங்கு பல ஆன்ம அன்பர்களுடன் பழகி ஆன்மீக தொண்டுகள் செய்தார். பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம் உலகெங்கும் பரவி அனைத்து ஆலயங்களிலும் பதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தன்னுடைய சொந்த உழைப்பினால் சென்னை திருவான்மியூரில் ஓர் இடத்தை ஜீவ ஐக்கியமாவதற்கு வாங்கினார். அவ்வாறு இருக்கும் போது பாரிமுனையில் சுவாமிகள் தங்கி இருந்தார்கள். ஒருநாள் சாலையை கடக்கும் போது, வாகனம் ஒன்று சுவாமியின் காலில் வேகமாக மோதியது. அப்போது சுவாமிகளுக்கு கால் எலும்பு முறிந்து போனது. பின்னர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சுவாமிகளை கொண்டு போய் சேர்த்தனர். அந்த விபத்தில் சுவாமிகளின் கால் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது. மருத்துவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது என்றார்கள். பின்னர் அன்று இரவு முருகப்பெருமான் திருவருளால் அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. என்னவெனில் இரண்டு வேல்கள் அந்த உடைந்து போன காலின் அதன் ஒரு பகுதியில் நின்றுக் கொண்டு, அந்த காலினை சரி செய்வதைப் போன்று காண முடிந்தது. அப்போது சுவாமிகளுடன் வந்திருந்த சுப்பிரமணியம் என்ற ஜோதிடர் இந்த காட்சியைக் கண்டு வியப்படைந்தார். பின்னர் மருத்துவர்கள் பாம்பன் சுவாமிகளை பார்த்தபோது உங்களின் கால் குணமாகி விட்டது. எப்படி நிகழ்ந்தது? பெருத்த ஆச்சர்யமாக இருக்கிறதே என்று அதிசயித்துப் பார்த்தனர்.

பின்னர் சுவாமிகள் பூரண குணமடைந்து அங்கிருந்து வந்து சேர்ந்தார். அந்த நிகழ்வை மறக்க முடியாமல் இன்றும் அரசு பொது மருத்துவமனையில் “பாம்பன் சுவாமிகள் ஹால்” என்று ஒரு வார்டு அமைக்கப்பட்டு இருக்கின்றது. இன்றும் அந்த வார்டில் சென்று வருகின்ற நோயாளிகள் பூரண குணம் அடைந்து வருவதாகவும் செய்தி நிலவுகின்றது. பலரும் உயிர் பிழைத்த அதிசயங்களும் அங்கு நிகழ்ந்து வருகின்றது.

பின்னர் சுவாமிகள் கி.பி.1929ஆம் வருடம் குகசாயுச்சிய நிலையில் சமாதி அடைந்தார்கள். சுவாமிகளின் சமாதி இன்றும் நிறைவான ஜீவ ஆற்றல் நிலவி வருகின்றது. ஜீவன் முக்தர்களின் சிறப்புக்களை வார்த்தையால் விவரிக்க இயலாது. ஏனெனில் பாம்பன் சுவாமிகளின் திருக்கோவிலில் எண்ணில்லா மாற்றங்கள் அடைந்து பெருவாழ்வுப் பெற்றவர்கள் ஏராளம்!… அடியேனும் ஒருவன். அனைவரும் தரிசித்து பயன் பெறுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button