சண்முகத் தவசி சுவாமிகள்

பொதிகை மலைத்தொடரில் தோற்றம் பெற்று, ஆழ்வார்திருநகரி ஸ்ரீவைகுண்டம் என்னும் பழம் பதிகளின் வழியாக பாய்ந்தோடி ஆத்தூர் என்னும் ஊரில் வங்கக்கடலில் கலக்கும் நதியே திரு நெல்வேலியாகும். இந்நகரம்…

சண்முகத் தவசி சுவாமிகள்

பொதிகை மலைத்தொடரில் தோற்றம் பெற்று, ஆழ்வார்திருநகரி ஸ்ரீவைகுண்டம் என்னும் பழம் பதிகளின் வழியாக பாய்ந்தோடி ஆத்தூர் என்னும் ஊரில் வங்கக்கடலில் கலக்கும் நதியே திரு நெல்வேலியாகும். இந்நகரம் பழமையில் மூங்கில் மரங்கள் அடர்ந்த தோப்பாகவும்,  காடாகவும், வேலியாகவும் கொண்டிலங் கியது. இத்தகைய மூங்கில்களினால் பெறப்பட்ட மூங்கில் நெல் மணிகளாலும், அத்தகைய நெல்மணிகளை தாங்கிய மூங்கில் மரங்கள் வேலியாகவும் அமைந்திருந்த காரணத்தால், இந்நகருக்கு முன்னோட்டாக திருவையும், நடுவாக நெல்லையும், பின் வேலியையும் சேர்த்து ‘திரு+நெல்+வேலி’ என்ற பெயரையே இந்நகர் பெற்றதென்பர்.  இத்தகைய நிகழ்வுக்கு சான்றாண்மையாக திகழ்வதே நெல்லை நெல்லையப்பர் கோயிலின் தல விருட்சமாக திகழும் மூங்கிலே எனலாம். மேற்சுட்டி நிகழ்வுகளை ஆதாரம் செய்யவே இம்மரம் தல விருட்சமாக செயல்படுத்தப்பட்டது என்று கூட கூறலாம்.

இத்தகு சிறப்பு நிலை பெற்ற திருநெல்வேலி நகரில் கடிவீரன் கோயில் தெருவில் ஆண்டியாபிள்ளை, தெய்வயாணை அம்மையார் அவர்களின் புதல்வனாய் கி.பி.1837ஆம் ஆண்டு பங்குனி திங்கள் 3ஆம் நாள் சுவாமிகள் பிறந்தார்கள். இவருக்கு சண்முகம் என்ற திருநாமத்தை தம் பெற்றோர் சூட்டி மகிழ்ந்தனர். பின்னர் நன்முறையில் சீரும் சிறப்புடன் நன்மைப் பேணி வளர்த்து வந்தனர். இந்நிலையில் சுவாமிகளுக்கு இரண்டு வயது நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுவாமிகளின் தந்தையார் இயற்கை எய்தினார். இத்தகு சூழலில் சுவாமிகளின் தாயாரும், அவருடைய அத்தையாரும், கை உலக்கையால் நெல் குத்துதல் போன்ற வேலையை செய்து, உடல் உழைப்பால் வருவாய் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றினர். அத்தகு கடினமானச் சூழலிலும் சிவனடியார்களுக்கும் தம்மால் முடிந்த பல உதவிகளை செய்து வந்தனர்.

குழந்தைப் பருவத்தில் சுவாமிகள் முரப்ப நாடு இராமலிங்கம் பிள்ளை என்பாரிடம் ஆரம்பக் கல்வி பயின்றார்கள். அப்போது மாணவர்களோடு விளையாடும் போது, தாடி மீசையுடன் அங்கே வந்த பெரியவர் ஒருவர் அங்கிருந்த குழந்தைகளிடம் பசிக்கு உணவு கேட்டார், மற்ற பிள்ளைகள் உணவு இல்லை என்று மறுக்க, சுவாமி சண்முகம் மட்டும் தன் தாயிடம் சென்று நிலைமையைக் கூறி உணவைப் பெற்று சுவாமிகளின் பசியாற்றினார்கள். அப்பொழுது சுவாமிகள் ஏழு அகவையை நிரம்பியவராக இருந்தார். சுவாமிகளைப் பாராட்டிய முதியவர் ஓர் ஓலையை கொடுத்து “இதை உனக்கு பருவ காலம் வரும் வரை பத்திரமாக வைத்திருந்து, உரிய காலத்தில் படித்து அறிந்து கொள்” என்று கூறி ஆசீர்வதித்துச் சென்றார்.

பின்னர் கல்வியில் சிறந்து விளங்கிய சுவாமிகள் குடும்பத்தைப் பாதுகாக்க முதலில் ஒரு பல சரக்குக் கடையிலும், பின்னர் மேளிராவுத்தர் ஜவுளிக்கடை யிலும் வேலைக்கு அமர்ந்து குடும்பத்தைப் பாதுகாத்தார்கள். உரிய காலம் வந்தவுடன் அந்நாளில் ஆசி வழங்கி, மகானால் கொடுக்கப்பட்ட ஓலையை எடுத்து படித்து ஞானோதயம் அடைந்து, யோக மார்க்கத்தின் மனம் சென்று,  வாலை அம்பிகையை நினைத்து தபசு செய்து வந்தார்கள். அப்போது வாலை பிரசன்னமாகி ஆசீர்வதித்தது. சுவாமிகளுக்கு தமிழ்ப்பாடல் பாடும் ஆற்றலும் சகல ஞானமும் யோக மார்க்கமும் வையத்தில் தேர்ச்சியும் உண்டாயின. அடிக்கடி பொதிகை மலைக்குச் சென்று தபசு செய்து வந்தார்கள். சுவாமிகளின் தாயார் சுவாமி களுக்கு மணம் முடிக்க முயற்சித்தார்கள். ஆனால் சுவாமிகள் காலத்தைக் கடத்தி பிரம்மச்சாரியாகவே விரதம் மேற்கொண்டு இருந்து விட்டார்கள்.

இத்தகு நிலையில் பொதிகை மலையில் யோகம் செய்யும் காலத்தில் ஒருமுறை மலை உச்சியில் இருக்கின்ற காளி கோயிலுக்குச் சென்று தபசு செய்தார்கள். இதன் காரணமாக மகா சக்தியின் வடிவமாகி காளியம்பிகை பிரசன்னமாகி வரமளித்தார். பொதிகை மலையில் ஒரு மகான் சுவாமிகளைப் பார்த்து நீங்கள் ஒரு பெரிய தபசி ‘அந்த தபசுக்கு ஏற்ற பெயரை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். அது முதல் சண்முகம் எனும் பெயர் மட்டும் இருந்த சுவாமிகள் ‘சண்முகத்தபசி’ எனும் பெயரில் அழைக்கப்படலானார்கள்.

இவ்வாறிருக்கையில் சுவாமி கடையில் வேலைக்கும், பின்னர் சொந்தமாகவும் தொழில் செய்யும் காலத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த  சிலர் கடைக்கு வந்து போவார்கள். அவர்களுள் சிலருக்கு மற்ற வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோய்க்கு மருந்து கொடுத்து குணப்படுத்தினார்கள். அதனால் மகிழ்ந்த அன்பர்கள் சுவாமிகளிடம் தங்கள் ஊராகிய ஸ்ரீவைகுண்டம் வந்து கோட்டைக்கு வடபுறம் இருக்கும் தங்கள் இடத்தில் தங்கியிருக்குமாறு வேண்டினர். சுவாமிகளும் சம்மதம் தெரிவித்தார்கள். அங்கிருந்தபடியே பொதிகை மலைக்கு சென்று வருவார்கள். சில காலம் கழிந்தவுடன் தனியாய் முதுமையிலிருந்த தன் தாயாரை திருநெல்வேலியிலிருந்து அழைத்து வந்து தம்முடன் இருத்தி, பராமரித்தார்கள்.  தாயார் கி.பி.1893ஆம் ஆண்டு இப்பூவுலகை விட்டு நீங்கினார்.

சுவாமிகள் பெரிய சித்தயோகி, எவ்வளவோ பெரிய சித்துக்கள் செய்ய ஆற்றலிருந்தும், அவற்றை வெளியே காட்டிக்கொள்வதில்லை. வைத்தியம் செய்வதில் அளவுகடந்த திறமையிருந் தாலும் அதனை தொழிலாக வைத்த தில்லை. பெரும்பொருள் தர பலரும் காத்திருந்தாலும், சுவாமிகள் எளிய வாழ்வையே வாழ்ந்தார்கள். அன்னமிட்டு பிறர் பசி கலைவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானியாக விளங்கினார்கள்.

சுவாமிகள் ஆறு மாதத்திற்கு முன்னமேயே சிலரை அழைத்து, தாம் சமாதி ஆகும் நாள் நேரம் குறிப்பிட்டு சமாதி வைக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டார்கள். அவ்வாறே சண்முகத் தவசி சுவாமிகள் கி.பி.1901ஆம் ஆண்டு ஆனி திங்கள் சுவாதி நட்சத்திரத்தன்று பத்மாசனம் இட்டு அமர்ந்து அந்நிலை யிலேயே பரிபூரணமானார்கள்.